கொவிட் தொற்றினை சுதேச மருத்துவ முறையில் கட்டுப்படுத்துவது தொடர்பிலான வேலைத்திட்டம்

எம்.ஏ.றமீஸ்)
கோவிட்-19 நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில் சுதேச மருத்துவ முறையின் மூலமும் தற்போது பல்வேறான வேலைத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக, மக்களின் தேகாரோக்கியத்தினைத் தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் மூலிகைப் பானம் தற்போது கல்முனைப் பிராந்தியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இதனை மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் அருந்தி வருகின்றனர். இப்பானம் அருந்திய பின்னர் பல்வேறான நன்மைகளை மக்கள் உணர்ந்துள்ளனர் என கல்முனைப் பிராந்திய சுதேச வைத்தியத்துறை இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் அத்தியட்சகருமான டொக்டர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.
கொவிட் தொற்றிலிருந்து சுதேச மருத்துவ முறையில் பொது மக்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(11) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொவிட்-19 தொற்றிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் பல்வேறான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைவாக எமது சுதேச மருத்துவ முறையின் மூலம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும் வேலைத் திட்டங்களை நாம் அமுல்படுத்தியுள்ளோம்.
கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட் நோயின் பரம்பலால் பல்வேறான தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் உள்ள மக்களின் தேகாரோக்கியத்தினை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பினை வலுப்படுத்தும் சபுவே ஜோசான் எனும் மூலிகைப் பானம் தயாரிக்கும் பொதிகளை நாம் மும்மூரமாக விநியோகித்து வருகின்றோம்.
கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட் தொற்று ஏற்பட்ட முதலாம் அலையின் போது சுமார் 26 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வாறான மூலிகைப் பொதிகளை நாம் விநியோகித்துள்ளோம். தற்போது கொவிட் தொற்றின் இரண்டாம் அலையின் போது பாதிப்பிற்குள்ளான பகுதிகளுக்கு இதுவரை 15 ஆயிரம் குடும்பங்களுக்கான மூலிகைப் பொதிகளை வழங்கியுள்ளோம்.
கடந்த எட்டு நாட்களாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான மூலிகைப் பக்கற்றுக்களை நாம் மக்களுக்காக வழங்கியுள்ளோம். இவ்வேலைத் திட்டம் அப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தருணத்தில், அக்கரைப்பற்று பிரதேசத்தினை அண்டிய அட்டாளைச்சேனை பகுதி மக்களுக்காக ஐயாயிரம் பொதிகளை வழங்கும் வேலைத் திட்டத்திற்கமாக தற்போது ஆயிரம் குடும்பங்களுக்கான மூலிகைப் பானம் தயாரிக்கும் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
எம்மால் விநியோகிகப்பட்டு வரும் இம்மருந்துப் பொதி நூறு சதவீதம் தூய மூலிகைகளால் தயார் படுத்தப்பட்டதாகும். இதனை அருந்துவதன் மூலம் எவ்வித பக்கவிளைவுகளும் மக்களுக்கு ஏற்படுவதில்லை. இதன் பயன்பாடுகளை அறிந்த மக்கள் தற்போது எம்மை நாடி தாமாக முன்வந்து இம்மருந்தினைப் பெற்று அருந்தி வருகின்றனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள மக்களுக்காக இந்நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் மருந்துப் பொதிகளை நாம் விநியோகித்து வருகின்றோம்.  இங்குள்ள நோயாளர்கள் இப்பானத்தினை மிக விருப்பத்துடன் அருந்தி வருவதோடு, தமது உடலில் மிகுந்த சாதகம் மிகு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர் என்றார்.