கொரோனாவை காரணமாக வைத்து தமது ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசு மழுங்கடிக்கிறன்றது -அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் குற்றச்சாட்டு-

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

இலங்கை அரசு நாட்டில் உள்ள கொரோனா நோயினை காரணம் காட்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை மழுங்கடிப்பதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி குற்றம் சாட்டியுள்ளார்.

உலக மனித உரிமைகளை தினத்தினை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை(10) திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்இ

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கின்றது காரணம் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடுவதற்கான அடிப்படை உரிமைகள் கூடி இன்று எமக்கு மறுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டமானது அம்பாறை மாவட்டத்தில் தொல்லாயிரம் நாட்களை எட்டியுள்ளன. எமது அமைப்பு அரசாங்கத்துக்கு எதிராக போராடவில்லை நாங்கள் கோரும் ஒரே ஒரு விடயம் நாங்கள் உயிருடன் இராணுவத்திடம் ஒப்படைந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தான் கேட்டு நிற்கின்றோம்.

இதேவேளை நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்ற போதிலும் எமது நினைவு தினம் ஆலய வழிபாடுகள் மற்றும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு பல தடைகளை தெரிவித்து வருகின்றன.

எது எவ்வாறு இருந்த போதிலும் எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறியும் வரை போராட்டம் தொடரும் என்றும் இனிமேலும் இந்த நாட்டில் யாரும் வலிந்து காணாமல் ஆக்கப்படும் நிலைய தோன்றாது இருக்க வேண்டும் என்பதுடன் எமது போராட்டங்களுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் நியாயமான தீர்வுகளை பெற்றுத் தருவேண்டும் என  மேலும் தமது கருத்தினை முன்வைத்திருந்தார்.