அட்டாளச்சேனையில் நடமாடும் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கான அறிவித்தல்.

(எம்.ஏ.றமீஸ்)
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளிடம் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட அனுமதிச் சான்றிதழ் உள்ளதா என்பதனை பரிசீலித்த பின்னரே பொதுமக்கள் அவ்வியாபாரிகளிடம் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் என பிரதேச சுகாதர வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.
கொவிட்-19 நோய் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச நிலைவரம் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று(09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவின் கீழ் ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, அட்டாளைச்சேனை, ஆலம்குளம் மற்றும் தீகவாபி ஆகிய பிரதேசங்கள் உள்ளன. இவ்வாறான பிரதேசங்களில் விற்பனை நடவடிக்கைகளுக்காக ஈடுபடவுள்ள குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு எமது சுகாதாரத் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களிடம் நாம் பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் ஆகிய பரிசோதனைகள் போன்றவற்றை மேற்கொண்டுள்ளோம். இதன் பின்னர் விஷேடமான அனுமதிப் பத்திரத்தினை அவர்களுக்கு நாம்  விநியோகித்திருக்கின்றோம். இவ்வியாபாரிகள் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தினை கண்டிப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
இவ்வாறு அவர்களிடம் உள்ள வியாபார அனுமதிப்பத்திரத்தினை பொதுமக்கள் பரிசீலித்ததன் பின்னரே அவர்களிடம் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களினால் கடந்த காலத்தில் கொவிட் தொற்று அதிகமாக பரவிய விடயத்தினைக் கருத்திற் கொண்டு, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறிப்பாக நடமாடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நாம் மிகந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.
கொவிட் நோயினைப் பொறுத்த வரையில் இதனைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பானது மிக முக்கியமானதாய் அமைகின்றது. இந்நோயினனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு எழுபது சதவீதம் அவசியமாகின்றது. இந்நோய்க் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாக இருந்தால் பொதுமக்கள் தம்மாலான முற்றுமுழுதான பங்களிப்பினை வழங்க வேண்டும்.
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் இதுவரை 35 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் நேற்று மாத்திரம் 13 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதே இதுவரை இனம்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகமானவர்களாக உள்ளனர்.
இப்பிரதேசத்தில் இதுவரை 500 பி.சி.ஆர் பரிசோதனைகளும், 250 இற்கும் மேற்பட்ட அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட தூரப்பிரயாணத்தில் ஈடுபடும் சாரதிகள், வெளிப் பிரதேசங்களுக்கு சென்றுவரக்கூடியவர்கள் போன்ற பல்தரப்பினருக்கு இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.