கல்முனை சந்தை வியாபாரிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை கட்டாயம்;

மறுப்போர் மீது சட்ட நடவடிக்கை;
வியாபாரங்களும் முடக்கப்படும்.

-சுகாதார வைத்திய அதிகாரி றிஸ்னி எச்சரிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிரதேச பொதுச் சந்தைகளில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு முன்வர வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அவர்களது வியாபார நடவடிக்கைகளும் முடக்கப்படும் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி தெரிவித்தார்.

புதன்கிழமை கல்முனையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு செயற்பாடுகளில்  ஈடுபட்டபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது கல்முனைப் பிராந்தியத்திலுள்ள அக்கரைப்பற்று பிரதேசம் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து செல்கின்றது. சாய்ந்தமருது, சம்மாந்துறை, இறக்காமம் போன்ற பிரதேசங்களிலும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எமது கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் 06 பேர் கொரோனா தொற்றுக்குதாக்கியுள்ளனர். கல்முனை வடக்கு சுகாதாரப் பிரிவில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு அரச ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிலைமையில் கூட எமது பொது மக்களும் வர்த்தகர்களும் பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை. பலரும் வெளியூர்களுக்கு சென்று வந்து, சுகாதாரத்துறையினருக்கு அறிவிக்காமல் தகவல்களை மறைத்து விட்டு, பொது இடங்கள், கடைத்தெருக்களில் சாதாரணமாக நடமாடுகின்றனர். இவர்களது பொறுப்பற்ற செயற்பாடுகள் எமது பிரதேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எவராவது வெளியிடங்களுக்கு சென்று வந்தால், சுகாதார துறையினருக்கு அறிவித்து, முறையான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் பாரிய அனர்த்தங்களை தவிர்க்க முடியும். ஆனால் இவ்வாறானவர்களை நாமே தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது. அவர்கள் தாமாக முன்வருகிறார்கள் இல்லை. நாம் தேடிப்பிடிக்கின்ற நபர்கள் கூட உண்மையான தகவல்களைத் தராமல் பல விடயங்களையும் மறைக்கின்றனர்.

சந்தைகளில் வியாபாரம் செய்கின்ற, வெளியிடங்களுடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு பி.சி.ஆர், பரிசோதனை செய்ய முற்பட்டால், அவர்கள் ஓடி, ஒளிந்து விடுகின்றனர். இதற்கு அவர்களது ஒத்துழைப்பை பெறுவதென்பது பெரும் சிரமமாக இருக்கிறது. இதனால் சுகாதாரத்துறையினராகிய நாம் பாரிய சவாலை எதிர்கொள்கின்றோம். ஆகையினால் இனிமேல் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு முன்வராமல் மறுப்புத் தெரிவிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். அவர்களது வியாபாரமும் முடக்கப்படும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கல்முனைப் பிரதேசத்தில் கொரோனா அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் கூடுகின்ற இடங்களில் சுகாதார நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதற்கு வியாபாரிகளும் பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்- என டொக்டர் றிஸ்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.