ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்ட பயிற்சி நெறி

????????????????????????????????????

ந.குகதர்சன்

குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களில் வாழ்வாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் வகையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதியின் திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் பயளானிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கல்குடாத் தொகுதியில் முதல்கட்டமாக ஆரம்பிக்கும் நிகழ்வு வாழைச்சேனை கும்புறுமூலை தேசிய இளைஞர் சேவைகள் படையணி நிலையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையார் எஸ்.ஏ.எம்.சாலீம் மௌலானா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் நிதி பணிப்பாளர் திருமதி.நயோமி சந்தமாலி, பலநோக்கு அபிவிருத்தி செயலணியின் படையணி உதவி பணிப்பாளர் மேஜர் பி.கமகே, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கும்புறுமூலை தேசிய இளைஞர் சேவைகள் படையணி நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கப்பிட்டி முதுநாகே, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது செங்கலடி, கிரான், வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கு முதல்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட எண்பது பயனாளிகளுக்கு பயிற்சி நெறிக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த பயிற்சி நெறியில் சமூக சுகாதார உதவியாளர், பேருந்து சாரதிகள், விவசாய வெளிக்கள உதவியாளர்கள், நாட்டு மேடை அபிவிருத்தி உதவியாளர்கள் போன்ற பயிற்சிகள் தங்களது செயலக பிரிவிலுள்ள திணைக்களங்களில் இடம்பெறவுள்ளது.

அத்தோடு நான்கரை மாதங்கள் வெளிக்கள பயிற்சிகள் நிறைவு பெற்றதுடன், சித்திகள் பெறும் பட்சத்தில் தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும், சான்றிதழ்களை பெறும் பட்சத்தில் நிரந்தர நியமனம் பெற்றுக் கொள்ள உதவியாக அமையும் என்று தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையார் எஸ்.ஏ.எம்.சாலீம் மௌலானா தெரிவித்தார்.