திருக்கோவில் பிரதேசத்தில் தொடரும் கடலரிப்பும் அழிந்துவடைந்து வரும் நுற்றுக் கணக்கான தென்னை மரங்கள்

(திருக்கோவில்  நிருபர் எஸ்.கார்த்திகேசு)

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் கடற்கரைப் பிரதேசம் தொடர்ந்தும் கடலரிப்பானது பாரிய சேதங்களை ஏற்படுத்தி வருவதுடன் பயன்தரும் நூற்றுக் கணக்கான தென்னை மரங்களும் அழிவடைந்து வருகின்றன.

வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக கடலில் பாரிய கடல் அலைகள் உருவாகிய வேளை அதன் தாக்கம் காரணமாக மேலும் இப்பிரதேசத்தில் கடலரிப்பு அதிகரித்து இருப்பதையும் தற்போது அவதானிக்க கூடியதாக இருக்கின்றன.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தம்பட்டை முதல் உமிரி வரையான கடலோரப் பிரதேசம் எழில் இழந்து காப்படுவதுடன் திருக்கோவில் பிரதேச மக்களின் ஓய்வு நேர இயற்கையான எழில்மிக்க மணல் பிரதேசமும் அழிவடைந்து செல்லுகின்றன.

இதேவேளை பொருளாதாரத்தின் வளமாக கருதப்படுகின்ற நூற்றுக் கணக்கான தென்னை மரங்களும் தொடர்ந்தும் கடல் அலைகளுக்கு இரையாகி வருவதுடன் அதனை தமது வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் குடும்பங்களும் கவலை அடைந்தும் உள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்று தொன்மைமிக்க ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தினை கடலரிப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் திருக்கோவில் பிரதேசசபை மற்றும் திருக்கோவில் பிரதேச செயகம் இணைந்து ஆலயத்தின் பிரதான வாயில் கதவுக்கு முன்னாள் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் கற்வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதனையும் தாண்டி கடல் நீரானது ஆலயத்திற்குள் செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றன.