தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்

(மட்டக்களப்ப மாநகர பிரதி முதல்வர் – க.சத்தியசீலன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ எமது பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்;. எப்போதும் தேசியத்தினூடாகவே எமது பயணம் தொடரும். ஆனால் சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. மக்களுக்காகவே சேவையாற்ற வந்தவர்கள் நாங்கள் மக்களுக்காவே செயற்படுவோம் தனிநபருக்காக செயற்பட மாட்டோம் என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடைநடுவில் பதீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி முதல்வரால் சபை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபையின் இன்றைய விசேட அமர்வில் மாநகரசபையின் 2021ம் ஆணடுக்கான வரவுசெலவுத் திட்டம் மாநகர முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று பாதீடு நிறைவேற்றப்படுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பாதீட்டில் இன்னும் சில திருத்தங்கள் இடம்பெற இருப்பதாகக் கூறி முதல்வர் சபையினைக் கலைத்து வெளிநடப்புச் செய்திருந்தார். இது ஒரு சட்டத்திற்கு முரணான செயலாகவே நான் கருதுகின்றேன்.

டிசம்பர் மாதத்தில் மாநகரசபையின் பாதீடு கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருந்தும் முதல்வர் தன்னிச்சையாகவும், தான்தோன்றித் தனமாகவும் இம்முடிவினை எடுத்து வெளிநடப்புச் செய்திருக்கின்றார். மாநகர முதல்வர் என்ற அடிப்படையில் நானும் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கட்சி பேதங்களுக்கப்பால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொள்வதற்காகவே நாங்கள் மக்களால் இந்த உயரிய சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம். மக்களின் எதிர்பார்ப்பான நல்ல சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே உறுப்பினர்கள் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு இந்த மாநகரசபையை சிறப்பாக நடாத்திக் கொண்டு செல்கின்ற வேளையில் முதல்வர் அவர்கள் தன்னிச்சையான பல முடிவுகளை பலகாலமாக எடுத்துக் கொண்டிருக்கின்றார். அதற்கான ஒரு எதிர்ப்பலை இன்று உருவாகி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இவ்வாறான ஒரு செயலைச் செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

மிகவும் முக்கிய விடயம் மட்டக்களப்பு மாநகரசபைக்கு இன்றுவரை ஒரு செயலாளர் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இதன் காரணமாகத் தான் இவ்வாறான நிலைமைகள் இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்போதும் தேசியத்தின் பாலும், நியாயத்தின்பாலும் நிற்பவர்கள். சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எனவே இவ்வாறான தீர்மானத்தை இன்று முதல்வர் எடுத்தமையானது இவரது தனிப்பட்ட காரணமாகவே இருக்கின்றது. அவரது ஆசனம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகச் செய்தாரோ தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ எமது பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்;. எப்போதும் தேசியத்தினூடாகவே எமது பயணம் தொடரும். எங்களோடு இணைந்து செயற்படக் கூடிய புதிய முதல்வரொருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியினூடாக வரும்போது நாங்கள் எங்கள் நூறு வீத ஆதரவினை வழங்கி அவருடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் மாநகரசபையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்ற பல கருத்துக்கள் முகந்தெரியாத முகநூல்கள் வாயிலாக பரவிக் கொண்டிருக்கின்றது. விடயம் என்னவென்றே தெரியாமல் அவ்வாறான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்காகவே சேவை செய்வதற்கென வந்திருப்பவர்கள். மக்களுக்காவே நாங்கள் செயற்படுவோம் தனிநபருக்காக செயற்பட மாட்டோம். என்றும் தமிழ்த் தேசியத்திற்காக நிற்போம் என்று தெரிவித்தார்.