பொத்துவில் பிரதேசத்தில் 80 பேர் தனிமைப்படுத்தலில்

(எம்.ஏ.றமீஸ்)
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள மக்களோடு தொடர்பு படக்கூடிய தரப்பினருக்கு நேற்று(03) பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
வர்த்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோர் போன்றோருக்கு கடந்த மூன்று தினங்களாக இப்பிரதேசத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை பொத்துவில் பிரதேசத்தில் ஏழு பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் இவர்கள் குணமடைந்து வீடுதிரும்பி இயல்புவாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யு.அப்துல் சமட் தெரிவித்தார்.

பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தாம் கொரோனா தொற்றற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறானவர்கள் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இதற்கமைவாக பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவின் கீழுள்ள பசறிச்சேனை,உல்லை, குண்டுமடு உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள நடமாடும் வர்த்தகர்கள், வியாபாரிகள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், நீண்ட தூரப் பயணத்தில் ஈடுபடுபவர்கள் போன்றோர் மத்தியில்  நேற்றைய தினம்  இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை போன்றன மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைவாக, 315 பி.சி.ஆர் பரிசோதனை இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது 80 பேர் பொத்துவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை 392 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்புக் காலத்தினை நிறைவு செய்துள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பி.சி.ஆர். வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த நபர்களுக்கு கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.