கல்விப்பணியில் 27 வருடங்களை நிறைவு செய்யும் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா

மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரியில் உதவி அதிபர் (கல்வி தரமேம்பாடு)க்குப் பொறுப்பான கடமையைச் செய்யும் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா அவர்கள் இக்கலாசாலையில் நிர்வாகத்துக்குப் பொறுப்பான இணைப்பதிகாரியாகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையை  சேர்ந்தவர்.

இவர் கலாநிதிப் பட்டத்தை  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2013 இல் பூர்த்திசெய்தவர். தனது முதுதத்துவமாணிப் பட்டத்தை  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2003 இல் பூர்த்தி செய்தவர். தனது இளமாணி சிறப்புக்கலை (தமிழ்) 2ம் வகுப்பு மேற்பிரிவில்  யாழ் பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்தவர். பட்டப் பின் கல்வி டிப்ளோமா பட்டத்தை   தேசிய கல்வி நிறுவகத்தில் பூர்த்திசெய்தவர். மேலும் பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பட்டத்தை  தேசிய கல்வி நிறுவகம் – மீபேயில் பூர்த்தி செய்துள்ளார். மேலும் மேலதிக மொழி விருத்திப் பாடநெறியில அதிவிசேட சித்தியும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் வித்தியாலயத்தில் சிறப்புக் கலைபட்டதாரி ஆசிரியராகவும், பின்னர் சேவைக்கால ஆசிரிய ஆலோசக இணைப்பாளராகவும், மாவட்ட பண்பாட்டலுவலராகவும், மட்டக்களப்பு மாவட்டக் கல்வித் திணைக்களத்தில்; கடமையாற்றியவர். பின்னர் மட்டக்களப்பு பெரியபுல்லுமலை ரோமன் கத்தோலிக்க தமில் கலவன் பாடசாலை அதிபராகவும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் மொழித்துறை, அழகியற்துறை விரிவுரையாளராகவும், இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையிலும், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியிலும் பகுதி நேர விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி மானிப் பட்ட மட்டக்களப்பு நிலைய விரிவுரையாளராகவும், பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி மட்டக்களப்பு நிலைய விரிவுரையாளராகவும், இளைஞர் சேவைகள் மன்ற நாடக டிப்ளோமா பாடநெறி விரிவுரையாளராகவும் மேலும் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகையின் உதவி ஆசிரயராகவும் செயற்பட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசின் பாட நிபுணத்துவக் குழு உறுப்பினராகவும், தேசிய கல்வி நிறுவகத்தில் மொழித்துறை மொழித் துறை பாடத்திட்டம் தயாரிக்கும் குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளதோடு மாவட்ட பரீட்சை சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். மேலும் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமா பாடநெறி விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார். மேலும் மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவையின் செயலாளராகக் கடமையாற்றியதோடு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கலாசாரப் பேரவையின் பொருளாளருமாகக் கடமையாற்றியுள்ளார்.

சுமார் 18ற்குமேற்பட்ட கல்வி, கலை, பண்பாடு, சமூக அபிவிருத்தி தொடர்பான செயற்றிட்டங்களிலும் 750ற்கும் மேற்பட்ட தமிழ்மொழி, அரங்கப் பயிற்சி, முன்பள்ளி, ஆரம்பக்கல்வி பயிற்சிப் பட்டறைகளிலும் வளவாளராகச் செயற்பட்டுள்ளார்.

கவிஞராக, கலை, இலக்கிய, அரசியல் ஆய்வாளராக பத்திரிகை எழுத்தாளராக, கலைஞராக, அரங்கச் செயலாளியாக, இயக்குநராக, ஒப்பனையாளராக, மேடை அமைப்பாளராக, விமர்சகராக பண்முக ஆற்றலுடன் இயங்கி வருபவர். அவர் தன்னை அதிகம் அரங்காளியாகவும், அரசியல் விமர்சகராகவும் கலையுலகில் அடையாளப்படுத்திக் கொண்டார்.

அந்த வகையில் மாற்றுப் பார்வையுடன் புதிய கருத்து உருவாக்கங்களில் அமைந்த 48ற்கு மேற்பட்ட அரங்க ஆற்றுகைகளை தயாரித்து அறிக்கை செய்துள்ளார். அதிதி, தாடகை வதம், நெருப்புக்குள் வாழ்வு, தமீழக தகனம், மொக்கு மரங்கள், மகாகவின் புதியதோர் வீடு, அப்பம் போன்ற ஆற்றுகைகள் மட்டக்களப்பிலும், அதற்கு வெளியிலும் அதிகமான கணிப்பிற்கு உரியன.

கலை இலக்கிய சமூக மறுமலர்ச்சி தொடர்பான கெளிவான, அரசியல் பார்வையுடைய ரவிச்சந்திரா “அரங்காலயா” ஆற்றுகைக்கான ஆற்றுகை நிறுவனத்தின் காப்பாளராகவும், கிழக்கு அரங்கச் செயற்பாட்டுக்குழுவின் போசகராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

தேசிய மற்றும் பிரதேச பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், இணையத்தளங்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ள இவர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாகாநாடு, மாகாண இலக்கிய விழாக்கள், மாவட்ட உலக இந்து மாகா நாடு போன்றவற்றில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார். மேலும் நாடகத்துறை, இலக்கியத்துறை, கல்வித்துறை, அரசியல்துறை சார்ந்த 10 நூல்களைஎழுதியுள்ளார்.

நாடகத் துறையில் மாவட்ட, மாகாண விருதுகளையும் பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். நாடகத்துறைக்கான மாவட்ட விருதுகளையும், கல்விக் கல்லூரிகளுக்கான நாடகத் துறையில் தேசிய மட்ட விருதுகளையும், 2008 இல் சிறந்த நூலுக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் இளைஞர் சேவைகள் மாவட்ட விருதுகளையும் நாடகத்துறையில் பெற்றுள்ளதோடு, ஆக்க இலக்கியத்துறைக்கான பாரதிராஜா கலைஞர் கௌரவ விருதினை 2014இல் பெற்றுள்ளார். ஈழத்தில் 29வது தமிழ் திரைப்படமான “ஒரேநாளில்” திரைப்படத்தின் பின்னணிக் குரல் கலைஞராகவும் செயற்பட்டுள்ளதோடு, “மாற்றம் ”, “உனக்கா? எனக்கா?” முதலான குறுந்திரைப் படங்களையும் தயாரித்து, இயக்கி, நடித்துள்ளதோடு, மாவட்ட ரீதியிலும், தேசிய ரீதியிலும் சிறந்த நடிகர், சிறந்த காட்சி அமைப்புக்கான விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இன்னியணியை மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியிலும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையிலும் தாபித்தவராவார். அத்துடன் ஈழத்துப்பாடல்கள் சிலவற்றுக்கு இசையமைத்தும் உள்ளார்.

இவர் மட்டக்களப்பு  புனிதமிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும், கலாநிதி வித்துவான் கமலநாதன், பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், கா.சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை, சி.மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு, சுப்பிரமணிய ஐயர், சிவலிங்கராஜா, அ.சண்முகதாஸ் ஆகியோரின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.