( வாஸ் கூஞ்ஞ)
பட்டங்கள் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் சிரமப்படுகின்றபோதும் ஜனாதிபதியின் உயரிய நோக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நீங்கள் பயிற்சியில் உங்களுக்கு எடுத்துக்காட்டிய சகிப்புத் தன்மை, ஒழுக்கம் மற்றும் நேர முகாமைத்துவத்தை பற்றிப்பிடித்து உங்கள் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் கல்வி தராதரம் குறைந்த மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பில் மன்னார் மாவட்டத்தில் 42 இளைஞர். யுவதிகளுக்கு முதற்கட்டமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் தேசிய இளைஞர் படையணி நிலையத்தில் மன்னார் பரநோக்கு அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் கேணல் மொகான் ஸ்ரீவர்த்தன தலைமையில் இவர்களுக்கான முதற்கட்டமான இரண்டு வாரம பயிற்சிகள் நிறைவுபெற்ற நிகழ்வு சனிக்கிழமை (28.11.2020) மன்னாரில் நடைபெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்தகுமார் மற்றும் மன்னார் பரநோக்கு அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் கேணல் மொகான் ஸ்ரீவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தொடந்து உரையாற்றுகையில்
இம் மாவட்டத்தில் அரசாங்க அதிபராக பதவியேற்று முதலாவது நிகழ்வாக இவ் நிகழ்வு அமைகின்றது. இதையிட்டு நான் மகிழ்வு கொள்ளுகின்றேன்.
ஜனாதிபதியின் உயர்ந்த சிந்தனையில் அதாவது இளைஞர் யுவதிகள் திசை மாறிச் செல்லக்கூடாது என்பதற்காகவும் இவர்கள் சரியான வழிகாட்டலின் கீழ் செல்ல வேண்டும் என்பதன் நோக்கில் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பாக இவ் திட்டம் அமைந்துள்ளது.
இவர்களின் மூலம் இந்த நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்குடன் இதற்கான ஒரு செயலனி உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் இதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எங்கள் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1834 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு இதில் முதல் கட்டமாக 42 நபர்களுக்கான இரண்டு வார பயிற்சிகள் இன்றுடன் (28.11.2020) நீங்கள் நிறைவு செய்கின்றீர்கள்.
இந்த பயிற்சி நெறியில் முதற்கட்டமாக நீங்கள் சகிப்புத் தன்மையை கற்று இருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நீங்கள் பயிற்சி பெற்ற இடமான இந்த இடத்தில் சரியான வசதிகள் இல்லாதபோதும் நீங்கள் இதுவிடயமாக எவருக்கும் முறையீடு செய்யாது உங்கள் பயிற்சியை பெற்று இருப்பதை அறிந்து பெருமை கொள்ளுகின்றேன்.
இன்று நான் இவ் நிகழ்வை நோக்கும்போது வீடுகளுக்குள் முடங்கி வாழ்ந்த உங்களது திறமைகளை இன்று நீங்கள் வெளிப்படுத்தியபோது இலைமறை காயாக இருந்த உங்கள் திறமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவ் மேடையில் ஒரு நாடகம் ஒன்றை நடித்துக் காட்டியிருந்தீர்கள். இன்றையக் காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு கொரோனா சம்பந்தமான நல்ல விழிப்புணர்வு, சிறந்த நடிப்பு. இவ்வாறு சிறமைசாலிகள் இனம் காணப்பட்டிருக்கின்றீர்கள்.
இங்கு உங்களுக்கு பல்வேறுபட்ட பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளன. சமூகத்திலும், திணைக்களத்திலும், உங்கள் குடும்பங்களிலும் நீங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் இவ்விரண்டு வாரங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பெற்றுக் கொண்ட உங்கள் பயிற்சியை நீங்கள் உங்கள் வாழ்வில் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். உங்களுக்கு ஆறு மாதப் பயிற்சிகள் வழங்கப்படுவதில் தற்பொழுது இரு வாரங்கள் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மிகுதிப் பயிற்சியை நீங்கள் நைற்றா மூலமும் ஏனைய திணைக்களங்கள் மூலமாவும் பெற இருக்கின்றீர்கள். அதாவது ‘எங்கே நீங்கள் நடப்பட்டிருக்கின்றீர்களோ அங்கே நீங்கள் பூத்து குழுங்குங்கள’ என்பார்கள்;.
நீங்கள் தெரிவு செய்துக் கொண்டதுக்கு இணங்க எந்த பயிற்சிகளைப் பெறுகின்றீர்களோ அதற்கேற்ற துறைகளில் நீங்கள் பணியாற்றப் போகின்றீர்கள். எந்த துறைகளாக இருந்தாலும் நீங்கள் முன்னேற முடியும். உயர்ச்சி அடைய முடியும். அதற்கு நீங்கள் உங்கள் பணியை இறுக்கமாக பற்றிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் கற்றுக் கொண்டதில் இன்னொன்று நேர முகாமைத்துவம். இதுவே உங்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். இதை நீங்கள் இறுக்கமாக பற்றிக் கொள்ளுங்கள்.
இதை நீங்கள் உங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வந்தால் உங்களுக்கு பயிற்சி தந்தவர்களுக்கும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்.
இன்றைய நாளில் நீங்கள் இரத்ததானம் வழங்கும் முகாமையும் ஒழுங்கு செய்துள்ளீர்கள். இதிலிருந்து எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் நாட்டின் அபிவிருத்திக்கு இந்த நாட்டின் ஆரோக்கியமான மனிதர்கள் வாழ்வதற்கு நீங்களும் உதவுகின்றீர்கள் என்பது முன்னுதாரணமாக அமைகின்றது.
அத்துடன் இன ரீதியான ஒற்றுமையையும் இங்கு எடுத்துக் காட்டுகின்றீர்கள். இங்கு பல இனம் சார்ந்தவர்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கின்றது.
தொடர்ந்து எமது மாவட்டத்தில் இனம், மதம் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இது எமது சமூகத்தில் எமது மாவட்டத்தில் பணி செய்யும் இடங்களில் இவ் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதையும் நான் உங்களை கேட்டு நிற்கின்றேன்.
அத்துடன் நான் இந்த நேரத்தில் இவ் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பலநோக்கு அபிவிருத்தி மன்னார் உதவிப் பணிப்பாளர் மொகான் ஸ்ரீவர்த்தன தலைமையில் இளைஞர் படையணி நிலைய இதற்கான வளவாளர் ஆரியரட்ன ஆகியோர் நல்ல பயிற்சி நெறியை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். அதிலும் நல்லொழுக்கத்தை உங்களுக்கு கற்றுத் தந்துள்ளதையிட்டு அவர்களுக்கும் அவர்களின் குழாமுக்கும் நன்றி கூறுகின்றேன்.
இவ் பயிற்சிகள் முடிவுற்றதும் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இது உங்களுக்கு ஒரு தராதரத்தை தருகின்றது. தற்பொழுது பல்கலைகழகம் சென்று பட்டங்கள் பெற்று வந்தவர்கள் கூட வேலைவாய்ப்பு பெற முடியாத நிலையில் நீங்கள் அதிர்ஷடசாலிகளாக இருக்கின்றீர்கள்.
ஜனாதிபதியின் உயர்ந்த சிந்தனையில் நீங்கள் அதிர்ஷடம் பெற்றுள்ளீர்கள். ஆகவே கிடைக்கப்பெற்ற இந்த வரப்பிரசாதத்தை நீங்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்.