(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனைப் பிராந்தியத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
இறக்காமத்தில் 04 பேரும் நிந்தவூரில் ஒருவரும் நாவிதன்வெளியில் ஒருவருமே புதிதாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இவர்கள் 06 பேரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இப்பிராந்தியத்தில் மினுவான்கொடை மற்றும் பேலியகொட கொத்தணிகள் ஊடான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 45 பேர் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இப்பிராந்தியத்தில் இன்னும் நூற்றுக்கணக்கானோரின் பி,சி,ஆர். பரிசோதனை முடிவுகள் வரவேண்டியிருப்பதாகவும் நாளாந்தம் பலருக்கு இப்பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் குறிப்பிட்டார்.