அக்கரைப்பற்று கொத்தணி தொற்று எண்ணிக்கை 31 ஆக உயர்வு.

(வேதாந்தி,  பாறுக் ஷிஹான்)

கிழக்கு மாகாணம்  கல்முனை சுகாதாரபிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று காலை 166பேரிடமிருந்து  பெறப்பட்ட  மாதிரிகளை அன்ரியன் பரிசோதனை ஊடாக பரிசோதனைமேற்கொண்டதில்  21பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அழகையா லதாகரன் தெரிவித்தார். இதன்மூலம்  தொற்றின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் நாளை மிகுதி 145பேருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்டரியன் பரிசோதனை ஊடாக சகல தொற்றாளர்களையும் இனம் காணமுடியாதென்றும் பீ.சீ.ஆர் பரிசோதனை ஊடாக மாத்திரமே சகல தொற்றாளர்களையும் இனம் காணமுடியுமென நுண்ணுரியல் விசேட வைத்தியநிபுணர் ஒருவர்  தெரிவித்தார்.

இதேவேளை இன்றுகுறிப்பிட்டபிரதேசத்துக்கு நுண்ணுரியல் விசேட வைத்திய நிபுணர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் உட்பட மூன்று  மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களும் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தனர்.

இதேவேளை கல்முனை பிராந்தியப்பணிப்பாளர் மாக்டர் குண சுகுணன் கருத்து தெரிவிக்கையில்

சமுக இடைவெளி பேனாமை, முக்க்கவசம் அணியாமை, பலர்ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன.இதேவேளை அக்கரைப்பற்று சுகாதாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதே வேளை ஆளுநரின் ஆலோசனைக்கு இணங்க கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில்  கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆகவே தாங்களும் தங்களது உறவுகளும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

இன்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 50பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தனது கருத்தில் தெரிவித்தார்.