முல்லைத்தீவில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள்! இதுவரை 6 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

3D illustration design digital representation in red and white background

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் மையங்களில் மீண்டும்  கொரோனா தொற்றுக்குள்ளளாவர்களுடைய உறவினர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம்   என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தல் செயல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

அந்த வகையில் கொரோனா வைரஸின்  தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு விமானப்படைத்தளம் கேப்பாபுலவு  59 ஆவது படைப்பிரிவின் இராணுவ பயிற்சி பாடசாலை புதுக்குடியிருப்பு திம்பிலி 68 ஆவது படைப்பிரிவின் இராணுவ பயிற்சி பாடசாலை ஆகிய  3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்கி வந்த நிலையில் அவை இராணுவத் தளபதியின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் செயற்திட்டங்கள் இடம்பெறும் என்ற அறிவிப்பை  தொடர்ந்து மூடப்பட்டிருந்தன

இதனைத் தொடர்ந்து விமானப்படை உடன் தொடர்புடையவர்களை தனிமைபடுத்துகின்ற நோக்கத்தோடு கடந்த 21ம் 22ம் திகதிகளில்  முல்லைத்தீவு கேப்பாபிலவில் விமானப்படைத் தளத்தில் விமானப்படையுடன்  தொடர்புடையவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள்  என்ற  அடிப்படையில் 145 பேர் கொண்டுவந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்

இவர்களில் ஒரு தொகுதியினருக்கு நேற்று முன்தினம் (23) மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் அவர்கள் கொரோனா சிகிச்சை  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்

இந்நிலையில் இன்னும் ஒரு தொகுதியினருக்கான பி சி ஆர்  பரிசோதனைகள் நேற்றைய தினம் (24) மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர்களில் நான்கு பேர்   கோரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையமான 59-வது படைப்பிரிவின் உடைய இராணுவ பயிற்சி பாடசாலையில்  டுபாய் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 17 பேர் இன்று அதிகாலை 1 மணியளவில்  கொண்டு வந்து  தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அறியமுடிகிறது

அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறதோடு இதுவரை தனிமைப்படுத்த நிலையங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 6 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது