கலைமகள் ஹிதாயாவின் மறைவு சமூகத்திற்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு;

மருதம் கலைக்கூடல் மன்றம் அனுதாபம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கிழக்கின் முதுபெரும் பெண் இலக்கிய ஆளுமையான கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் திடீர் மறைவு சமூகத்திற்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பாகும் என்று மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும் முன்னாள் முஸ்லிம் கலாசார விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளருமான கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (23) இரவு மரணித்து, செவ்வாய்க்கிழமை (24) மாலை சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

“இலக்கிய உலகில் பெண் ஆளுமைகளின் வகிபாகம் மிகவும் அரிது. அந்த வகையில் சாய்ந்தமருது மண்ணில் பிறந்து, இலக்கிய உலகில் மிகவும் புகழோடு பிரகாசித்த கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் இழப்பு மிகவும் கவலையான ஒன்றாகும். அவர் மரணமடைந்த தகவல் எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எழுத்தாளராக, கவிதாயினியாக, சமூக ஆர்வலராக, கல்வி, கலாசாரம், சிறுவர், பெண்கள் உரிமைகள் மற்றும் மனித நேய செயற்பாட்டாளராக கடந்த 04 தசாப்த காலமாக மிகச்சிறப்பாகப் பணியாற்றி வந்த கலைமகள் ஹிதாயா, இறுதி மூச்சுவரை தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். மரணிப்பதற்கு முதல் நாளன்று கூட தனது முகநூலில் பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அதுவும் ஆத்மீகம் மற்றும் மரணம் தொடர்பில் அவரது கரிசனையையும் ஜனாஸா எரிப்பு விவகாரத்தால் சமூகம் அடைந்திருக்கின்ற வேதனைகளையும் பதிவு செய்திருக்கிறார்.

இவர், வேறு சிலரைப்போன்று முழு நேரமும் பெண்ணியம் பற்றிப்பேசி காலத்தை வீணடிக்காமல், ஆத்மீக சிந்தனைத்தளத்தில் நின்று, சமூகப் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதிலும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதிலும் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்காகவும் தனது எழுத்தாளுமை ஊடாக பெரும்பங்காற்றியுள்ளார்.

இலங்கையில் மாத்திரமல்லாமல் இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா என்று தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான ஓர் எழுத்தாளராக அறியப்பட்டிருந்த கலைமகள் ஹிதாயா- தேசிய, சர்வதேச விருதுகள் பலவற்றைப்பெற்று, சாதனை படைத்திருக்கிறார். இவரது இழப்பு என்பது சமூக, இலக்கியப் பரப்பில் என்றும் ஈடுசெய்ய முடியாத வெற்றிடமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவரது வணக்க வழிபாடுகள் மற்றும் நற்காரியங்களையும் சேவைகளையும் பொருந்திக் கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரை இழந்து, துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு மருதம் கலைக்கூடல் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.