கசமுகாசூரனின் கர்வமடக்கிய கணபதி

மூ.அருளம்பலம் (ஆரையூர் அருள்)

முன்பொரு காலத்தில் தேவேந்திரனுடன் போர்புரிந்து தோல்வியுற்று மனம் வருந்திய அசுரேந்திரன் தமது குலக்குருவாகிய சுக்கிராச்சாரியாரிடம் சென்று “நம்குலத்தில் தேவேந்திரனை வெல்லக்கூடிய ஒருவரை தோற்றுவிக்க ஏது வழி” என்று வினவ “மோட்சம் வேண்டித் தவம் செய்து கொண்டிருக்கும் வசிட்டமுனி வம்சத்தில் தோன்றிய மரகத முனிவரை அசுரகுலப் பெண் ஒருத்தி வசப்படுத்தி மணந்தால், அவளுக்கு யானைமுகத்துடன் கூடிய கசமுகாசூரன் என்ற மகன் பிறப்பான். அவன் தேவேந்திரனை வென்று அசுரர் குலத்தை தளைக்க செய்வான்” என்று சுக்கிராச்சாரியார் கூறினார்.

தன்குலத்துப் பெண்ணாகிய விபுதை என்பவளை அழைத்து தம் குலம் தழைக்க மகனொருவனை நீ பெற்றெடுக்க தவம் புரியும் மரகதமுனிவரின் தவத்தை கலைத்து அவரை நீ மணம்புரிய வேண்டும் என்று கூற, குலம் தழைக்கக் குழந்தையைப் பெற விருப்பம் கொண்ட விபுதை அப்படியே செய்கின்றேன் எனக்கூறி, மரகதமுனிவர் தவம் செய்த இடத்திற்குச் சென்று, அவர் தவத்தைக் கண்டு, வியந்து நின்று, தானும் இவரை மணக்கத் தவமிருத்தலே சாலப் பொருத்தமென நினைத்து, அவரெதிர் தவமிருந்தாள்.

மரகதமுனிவர் ஒரு நாள் தம் தவத்திலிருந்து கண்விழிக்க, கண்டகாட்சியில் ஓர் ஆண் யானையும், பெண் யானையும் மையல்வசமாகி மகிழ்ச்சியுடன் மருவ தன்வசமிழந்தவரின் முன்னால் தவம் செய்யும் விபுதையைப் பார்த்து நீ யார்? எனக் கேட்க, உங்களை மணம்புரிய வேண்டித் தவமிருக்கின்றேன் என அவள் கூற முனிவர் தம் எண்ணம் கைகூடியதாகக் கருதி சம்மதிக்க, அவர் ஓர் ஆண் யானை வடிவமாக, விபுதை பெண்யானை வடிவமாக இருவரும் அக் காட்டில் இன்புற்று வாழ்ந்த காலம், நீண்ட துதிக்கையும், இரண்டு கொம்புகளை உடைய கசமுகாசரன் பெண்யானை வடிவிலிருந்த விபுதையின் வயிற்றிலிருந்து பிறந்தான்.

கசமுகாசுரன் உலகங்களையே உண்டுவிடக்கூடிய ஆற்றலுடையவனாக கையில் கத்தியுடன் எங்கும் சுற்றித் திரிந்த வேளை, பெண் யானையான விபுதையின் மயிர்க்கால்களிலிருந்து எண்ணற்ற அசுரர்கள் படைக்கலங்களுடன் பிறந்து, ஆரவாரம் செய்யத் தொடங்கினர். மரகதமுனிவர் இவள் அசுரகுலம் என அறிந்து, பிரிந்து மறுபடியும் தவம் செய்யத் தொடங்கினார்.

கசமுகாசுரனும் அவனுடன் தோன்றிய அசுரர்களும் உயிரினங்களைக் கொன்று, உண்டு தேவர்கள் மற்றும் முனிவர்கள் முதலானோருக்கு பலவிதமான துன்பங்களை செய்து வந்தபோது, சுக்கிரபகவான் கசமுகனுக்கு பல அறிவுரைகூறி சிவனை நோக்கித் தவம் செய்து வரம் பெற்று இந்திராதி தேவர்களை வென்று அடக்குமாறு கூற, அதன்படி சிவனை விளித்துத் தவம்செய்து சிவனிடமிருந்து பல வரங்களையும் பெற்று, தேவ தச்சனை அழைத்து ஓர் அழகிய சிறந்த நகரை உருவாக்கி அதற்கு மதங்க நகரம்

எனப்பெயர் சூட்டி, அசுரேந்திரனை தமக்கு அமைச்சராக்கி முனிவர்கள்

தேவர்களையெல்லாம் தாமேவிய பணிகளைச் செய்யவைத்து, பல பெண்களை மணந்து இன்பமாக வாழ்ந்து வந்தவன், தேவர்களைப் பார்த்து, “நீங்கள் என்னை வணங்கும் போது, மூன்று முறை தலையில் குட்டிக் கொண்டு, பிறகு கைகளை மாற்றிக் காதுகளைப் பற்றிக்கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு வணங்க வேண்டும்”, என்று ஆணையிட்டான் அதன்படி தேவர்களும் செய்து வந்தனர்.

 

கசமுகாசுரன் செய்யும் துன்பங்கள் தாங்காமல், இந்திரன் முதலான தேவர்கள் கைலாய வாசலிலுள்ள விநாயகப் பெருமானிடம் முறையிட்டனர். துன்பத்தை போக்கி அருள்புரியுமாறு வேண்டினர். அவர்களுக்கு அருள்புரியச் சித்தம் கொண்ட எம்பெருமானாகிய ஏரம்பன் உடனே, படைகளுடன் போர்புரிய புறப்பட்டார்.

விநாயகரை எதிர்த்துப் போரிட படைகளுடன் வந்த கசமுகாசுரன் மழை போல அம்புகளை பொழிந்தான். விநாயகப் பெருமானும் அத்தனை அம்புகளையும் தன் அம்புகளால் பொடிப்பொடி ஆக்கினார். நெடுநேரம் நடந்த போரில் விநாயகப்பெருமான் கசமுகாசுரனின் ஆற்றலைக் கண்டு வியந்தார். பிறகு விநாயகப் பெருமான் தமது வலப்புற தந்தத்தின் முனையை ஒடித்து வீச, அது பேரிரைச்சலுடன் சென்று கசமுகாசுரனின் மார்பைப் பிளந்தது. பின்னர் அததந்தம் கடலில் சென்று நீராடிவிட்டு விநாயகக் கடவுளிடம் திரும்பி வந்து சேர்ந்தது. அதை ஓர் ஆயுதமாக தம் கையில் ஏந்திக் கொண்டார். கசமுகாசுரனின் அழிவைக் கண்டு தேவர்கள் பூமழை பொழிந்தனர், அவரை வாழ்த்தி வணங்கினர்.

 

 

மார்பு பிளந்து மண்ணில் சரிந்த கஜமுகாசுரன் ஒரு பெரிய மலையைப் போன்ற பெருச்சாளி வடிவங்கொண்டுவரக், கண்ட தேவர்கள் கலங்கிநிற்க அதனைப் பிடித்து தனக்கு வாகனமாக்கி அதன்மீது ஏறி அமர, விநாயகப் பெருமானின் திருவுருவம் பெருச்சாளியாக இருந்த கசமுகாசுரனின் உடம்பில் பட்டவுடன், அவனைப் பற்றிக் கொண்டிருந்த ஆணவமலம் அகன்றது. உடனே அவனுக்கு மெய்யுணர்வு உண்டாக்கியது. பெருச்சாளி வாகனத்தில் அமர்நதருளிய விநாயகப் பெருமானை முனிவர்களும் தேவர்களும் பணிந்து வணங்கினார்கள். அவர்கள் வினாயகக் கடவுளைப் பார்த்து, “நாங்கள் முன்பு கசமுகாசுரனிடம் செய்துவந்த குட்டு, தோப்புக்கரணம் ஆகிய செயல்களைத் தங்கள் முன்பு செய்துவழிபட அருள்புரிய வேண்டிக்கொள்கின்றோம்”, என்று வேண்ட, “அப்படியே செய்க”, என்று ஏகதந்தனாகிய விநாயகக் கடவுள் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிந்து விடைகொடுத்து வடத்திசை நோக்கிச் சென்றார். அம்முறைவழிபாட்டினை நாமும் இப்பொழுதும் விநாயகப் பெருமானை வழிபடும் போது மட்டும் தலையில் மும்முறை குட்டி, தோப்புக்கரணம் போட்டு வணங்கிவருகின்றோம். விநாயகர் ஆலயங்களில் திருவிழா உற்பவங்களில் “வேட்டைத்திருவிழா”, நடைபெறுவதற்கு மேற்போந்த வரலாறே காரணமாகும்.