திருகோணமலை – சம்பூரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதித்து மூதூர் நீதவான் நீதிமன்றம்  உத்தரவு.

எப்.முபாரக்
திருகோணமலை – சம்பூரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதித்து மூதூர் நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவிட்டுள்ளது.
சம்பூர் – கிழக்கு ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதனூடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கும் COVID தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமென பொலிஸாரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பொதுமக்கள் உள்ளிட்ட 10 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த மூதூர் நீதவான் இன்று தொடக்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு நிகழ்வுகளை நடத்தவோ அங்கு பிரவேசிக்கவோ தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று வேறு இடங்களில் விளக்கேற்றல்  மக்களை ஒன்று சேர்த்தல், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்தவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.