உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நிந்தவூருக்கு விஜயம்

பைஷல் இஸ்மாயில் –
நகர திட்டமிடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் (16) நிந்தவூருக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிந்தவூர் கலாசார மண்டபம் மற்றும் கடற்கரை பூங்கா என்பவற்றை பார்வையிட்டனர்.
இக்குழுவில் நகர திட்டமிடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.பி.எஸ்.ஜெயதிஸ்ஸ தலைமையில் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கட்டட திணைக்கள பொறியியலாளர்கள் ஆகியோர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் அழைப்பை ஏற்று வருகை தந்த குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமுடன் மேற்குறிப்பிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் பற்றி கலந்தாலோசித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அரசிடம் முன்வைத்த செயற்திட்டங்களை அரசு துரிதப்படுத்தும் நோக்கிலேயே தங்களது கள விஜயம் அமைந்திருந்ததாகவும், இச்செயற்திட்டங்கள் பற்றி மொறட்டுவ பல்கலைக் கழகத்தினால் வரையப்பட்ட முதன்மைத் திட்டம் அரச வர்த்தமானியில் பிரசுரிக்க இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமிடம் நகர திட்டமிடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்
எஸ்.பி.எஸ்.ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும், குறித்த இடங்களை மேலதிக அழகு படுத்தலுக்குரிய திட்ட பட வரைவாளர்கள் கொண்ட குழுவினர் மிக விரைவில் வந்து பார்வையிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் நிந்தவூர் காரியாலயத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.