யாசகர்களால் கொரோனா பரவல் பீதி நிலவி வருவதாக கல்முனைப் பிரதேச மக்கள் அச்சம்

ஜெஸ்மி  எம்.மூஸா

சுகாதாரப் பொறிமுறைகளைப் பேணாமல் வீதிகளிலும்; வீடுகளிலும் வலம் வரும் யாசகர்களால் கொரோனா பரவல் பீதி நிலவி வருவதாக கல்முனைப் பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கல்முனைப் பிரதேசத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளப் படுத்தப்பட்டு வரும்; நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பேணாது வீடுகளைத் தரிசிக்கும்; யாசகர்கள் தொடர்பில் சுகாதாரப் பகுதியினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமெனவும்; இவர்களை நெறிப்படுத்துவததற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிமனையினர் தொடரான பல ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் யாசகர்களின் திடீர்; நுழைவுகளால் கொரோனா  பரவல் ஏற்பட்டு விடக் கூடாது என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வீட்டிலுள்ள பெரியவர்கள் வேலைகளில் இருக்கும் போது வீடுகளில் வருகை தருகின்றவர்களுக்கு சிறுவர்களின் உதவியுடனேயே யாசகம் வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் சுகாதார நடைமுறைகளை எங்கனம் பேணுவார்கள் என்பதில் சிக்கல்கள் உள்ளன.

அதே வேளை யாசகம் பெறவருகின்றவர்களில் பெரும்பகுதியினர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. வீடுகளில் சுயகட்டுப்பாடுகளில் உள்ளவர்களை இந்நிலை பாதிக்கமாட்டாதா? எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாசகம் கேட்டுவருகின்றவர்களையும் கொடுக்கின்றவர்களையும் பாதிக்காத வகையில் அந்தத்தப் பிரதேச எல்லைக்குட்பட்ட பொதுச்சுகாதார அதிகாரிகள் மூலமாக கண்காணிப்பொன்றினைச் செய்வதுடன் இது தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பான சுகாதாரப் பொறிமுறையொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.