( வாஸ் கூஞ்ஞ)
மன்னாரிலிருந்து வெளி மாவட்டத்துக்கு கேரளாக் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடந்து புதன் கிழமை (11.11.2020) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களிடம் பெற்ற தகவலையடுத்து மேலும் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த புதன் கிழமை (11) வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் வாகனம் ஒன்றில் மன்னாரிலிருந்து கேரளாக் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டபோது குஞ்சுக்குளம் சோதனை சாவடியில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிசாரால் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனையைத் தொடர்ந்து மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமாரபள்ளேவலவின் வழிகாட்டல்களில் உதவி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ ராஐபக்ச தலைமையில் கொண்ட பொலிஸ் குழுவினர் மன்னார் பொலிஸ் நிலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரை (வயது 35) கைது செய்தபோது அவரிடமிருந்து 4 கிலோ 345 கிராம் இந்தியாவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
2020.11.12 அன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இவ் நபரை பொலிசார் வெள்ளிக் கிழமை (13) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஐராக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மூன்று தினங்கள் பொலிசார் மன்னார் பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சாப் பொதிகளை கைப்பற்றியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.