மட்டக்களப்பு- சித்தாண்டி பிரதேசத்தில் விபத்தில் இளைஞன் பலி.

(ஏறாவூர் நிருபர் எம்ஜிஏ. நாஸர்)
மட்டக்களப்பு- சித்தாண்டி பிரதேசத்தில் இன்று 12.11.2020 அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு- கொம்மாதுறை கண்ணகி வீதியைச்சேர்ந்த 23 வயதுடைய செல்வகுமார் கிஷோர் என்பவரே பலியானவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவ்வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் காப்புறுதிக் கம்பனியொன்றில் பணியாற்றிய இவ்விளைஞர் கொம்மாதுறையிலுள்ள அவரது வீட்டிலிருந்து இரவு 8.00 மணியளவில் புறப்பட்டு வாழைச்சேனைக்கு செல்வதாகக் கூறிச்சென்றுள்ளார்.
எனினும் இரவு ஏதோ ஒரு இடத்தில் தரித்துநின்றுவிட்டு அதிகாலைவேளையில் மோட்டார் சைக்கிள் அதிகவேகமாகச் சென்று சித்தாண்டி பிரதேச கடைத்தொகுதியொன்றில் மோதியுள்ளது.

சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தவேளை திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் விசாரணைகளை மேற்கொண்டார்.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.