கொரோனா அச்சம்! இந்திய மீனவர்களைத் துரத்தியடிக்க பயப்படும் கடற்படை – முல்லை கடற்றொழில் சமாசத் தலைவர் சுட்டிக்காடு.

ச.தவசீலன்

முல்லைத்தீவு – கடற்பரப்பில் அண்மை நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை அதிகரித்துள்ளது

இந் நிலையில் இது தொடர்பில் கடற்படையினருக்குத் தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் கொரோனா அச்சம் காரணமாக இந்திய மீனவர்களுக்கு அருகில் சென்று அவர்களைத் துரத்துவதற்கு அச்சப்படுகின்றார்கள். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தில் 10.11.2020 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 09.11.2020 அன்று இரவு முள்ளிவாய்க்கால் தொடக்கம் சாலை வரையான கடற்பகுதியில் கடற்கரையிலிருந்து ஒரு கடல் மயில் தூரத்தில் இந்திய இழுவைப்படகுகள் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக கிளைச்சங்க பிரதிநிதிகளால் தொலைபேசிமூலமாக எனக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கும், மாவட்டச் செயலாளருக்கும், கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கும் தகவல்களைப் பரிமாறியிருந்தேன்.

இந் நிலையில் அவர்கள் உடனடியாக கடற்படையினுடைய உதவியினைக் கோரியிருந்ததாகவும், கடற்படைதற்போதுள்ள கோரோனா அச்சம் காரணமாக இந்திய இழுவைப் படகுகளுக்கு அருகே செல்ல மறுத்துள்ளனர், அதனால் நடவடிக்கை எதனையும் செய்யமுடியாதுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது – என்றார்.