ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் செலின்

அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் செலின் கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார்.

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கும் 43 வயதாகும் செலின் கவுண்டரின் தந்தை நடராஜ், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.  கமலா காரிஸை போலவே, தங்கள் கிராமத்து பெண், அமெரிக்காவில் இப்படி ஓர் உயரிய பொறுப்பில் இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில், செலின் கவுண்டர் ட்விட்டர் தளத்தில்,  தனது ஜாதிப் பெயருடன் சேர்த்து தன் பெயரை புரொபைலில் வைத்திருப்பது பற்றி கேட்டபோது. “1970களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தபோது எனது தந்தை நடராஜ் பெயரை சேர்த்து செலின் நட்ராஜ் என வைத்தபோது அந்த பெயரைச் சொல்லி அழைக்க அமெரிக்கர்கள் சிரமப்பட்டதால், கவுண்டர் என்பதை வைத்துக்கொண்டேன். அந்த பெயரை நீக்கமாட்டேன். அதுதான் என் அடையாளம், வரலாறு” என்று செலின் கவுண்டர் பதில் அளித்துள்ளார். இந்தப் பதிலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ட்விட்டரில் பதிவாகி வருகின்றன.