உபநயனதீட்சை நிகழ்வில் இந்துமதகுரு சிவஸ்ரீ.மகேஸ்வரக்குருக்களுக்கு கௌரவம்!

கிழக்கிலங்கையின் பிரபல இந்துமதகுருவான சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்களுக்கு காரைதீவு மண்சார்பில் கௌரவமளிக்கப்பட்டது.

இக்கௌரவிப்பு காரைதீவு பாலையடிவால விக்னேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற  உபநயனநிகழ்வின்போது  நடைபெற்றது.

பிரதமகுரு சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரக்குருக்களின் புதல்வனான ம.நிதுர்ஷன் ஜயாவிற்கான உபநயனதீட்சைச்சடங்கு  பிராமணியமுறைப்படி பிரபலஇந்துக்குரு சிவஸ்ரீ. குவேந்திரக்குருக்களால் வெள்ளியன்று  நடாத்தப்பட்டது.

காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் இந்துசமய பிரமுகர்கள் குருக்கள்மார் சிவாச்சாரியர்கள் எனப்பலரும் இந்த உபநயனச்சடங்கில் கலந்துகொண்டனர்.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம் மற்றும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் பிரதமகுருவான கிரியாகலாமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் இந்துசமயநெறிப்படி வாழையடி வாழையாக வாழ்ந்து இந்துசமயநெறியை முறைப்படி கைகொண்டு மக்களை முறையாக வழிநடாத்தியமைக்காக காரைதீவு இந்துசமயவிருத்திச்சங்கம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

சங்கத்தின் முன்னாள்தலைவர் வி.ரி.சகாதேவராஜா கௌரவிக்கப்பட்ட சிவஸ்ரீ. மகேஸ்வரக்குருக்கள் பற்றிய வாழ்த்துரையை வழங்கி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

காலஞ்சென்ற சிவஸ்ரீ.சண்முகரெத்தினக்குருக்கள் பிரம்ஸ்ரீ நீதிநாதக்குருக்கள் ஆகியோரின் வழித்தோன்றல்களான குருபரம்பரையினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.