கிராம அலுவலகர் ஒருவர் மர்மமான முறையில் கொலை. மன்னாரில் சம்பவம்.

வாஸ் கூஞ்ஞ
கடமை முடிந்து தனது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றியவரான கிராம அலுவலகர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ் சம்பவம் செவ்வாய் கிழமை (03.11.2020) இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவில் கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவ் சம்பவம் தொடர்பாக ஆரம்ப விசாரனையில் தெரியவருவதாவது மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான  பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும், இலுப்பை கடவை கிராம அலுவலராக கடமையாற்றியவரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55)  என்பவர்   செவ்வாய்க்கிழமை (03.11.2020) இரவு  ஆத்திமோட்டையிலிருந்து தனது வசிப்பிடமான கள்ளியடிக்கு மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொழுதே இவர்  மர்மமான முறையில; தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால்  தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதhகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றுயிராக காணப்பட்ட இவரை பள்ளமடு வைத்தியசாலைக்கு உடன் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவம் தீவிர விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடமை உணர்வுடன் இவரின் செயல்பாடு இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக இவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.