கூட்டங்களில் கலந்து கொள்ளவதாயின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பது எத்தனை நாட்கள் வெளியில் இருப்பது?
(பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா)
பாராளுமன்றம் உட்பட மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் சந்திரகாந்தன் கலந்து கொள்ள வேண்டும் என்றால் எத்தனை நாட்கள் அவர் சிறையில் இருப்பார், எத்தனை நாட்கள் வெளியில் இருப்பார் என்பது தொடர்பில் சிறைச்சாலை அத்தியேட்சகர் சிந்திக்காமல் முடிவெடுக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இந்த புதிய அரசாங்கம் உருவாகிப் புதிய பாராளுமன்றம் கூடி இதுவரை நடைபெறவில்லை என்பது வேதனைக்குரியதும், விரும்பத் தகாததுமான ஒரு விடயமாகும். இலங்கையில் 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களிலும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. அதேநேரம் அந்த மாவட்டங்களில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருக்கின்றதாக நாங்கள் அறிகின்றோம். ஆனால் எமது மாவட்டத்தில் மட்டும் இன்னும் நடைபெறவில்லை.
எமது மாவட்டத்தைப் பொருத்த மட்டில் கூடுதலான பிரச்சினைகளை விவாதித்து முடிவு காண வேண்டிய நிலையிலே மட்டக்களப்பு மக்கள் இருக்கின்றார்கள். மேய்ச்சற்தரைப் பிரச்சினை, புன்னைக்குடா மீனவர்களின் பிரச்சினைகள், கொரோணா நிலைமைகள் தொடர்பான பிரச்சினைகள், தற்போது மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பல வயல்நிலங்கள் மூழ்கியுள்ள நிலையில் முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டப்படுவது போன்ற பல முக்கிய விடயங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டி இருக்கின்றது.
ஆனால் எமது மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்களும், கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இருந்தும் சந்திரகாந்தன் அவர்கள் வந்துதான் அந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறாமல் பிற்போடப்பட்டுக் கொண்டே வருகின்றது.
சந்திரகாந்தன் அவர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலே கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நேற்றையதினம் வழக்கொன்றும் நடைபெற்றது. இதன் போது சிறைச்சாலை அத்தியேட்சகர் அனுமதி கொடுத்தால் சந்திகாந்தன் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது. இருந்தும் சிறைச்சாலை அத்தியேட்சகர் எந்த அடிப்பிடையில் இதற்கு அனுமதி வழங்கப் போகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வது பற்றி எமக்கு எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் இந்த மாவட்டத்திலே 14 பிரதேச செயலகங்கள் இருக்கின்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கும் அவர்தான் தலைமை தாங்க வேண்டும். பாராளுமன்றம் ஒரு மாதத்திலே 08 நாட்கள் நடைபெறுகின்றது. பாராளுமன்றத்திற்கும் அவர் கலந்து கொள்ள வேண்டும். இத்தனை நாட்களுக்கு ஒரு சந்தேகநபர் கைதி வெளியில் நடமாட முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
எனவே பாராளுமன்றத்திற்குக் கலந்து கொள்ளுதல், மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தலைமைதாங்குதல் போன்ற விடயங்களுக்கு ஒரு சந்தேகநபர் கைதி தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் எந்தளவிற்கு முடிவெடுக்கப் போகின்றார் என்பது பற்றியும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாராளுமன்றம் உட்பட இத்தனை கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்றால் எத்தனை நாட்கள் அவர் சிறையில் இருப்பார், எத்தனை நாட்கள் அவர் வெளியில் இருப்பார் என்பது தொடர்பில் சிறைச்சாலை அத்தியேட்சகர் சிந்திக்காமல் முடிவெடுக்க மாட்டார்.
இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளாதவிடத்து ஒரு விசேட அனுமதியை எடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடாத்தி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.