களுவாஞ்சிக்குடி சுகாதாரவைத்திய அதிகாரி திடீர்மரணம்.

(காரைதீவு  நிருபர் சகா)

களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் சீனித்தம்பி கிருஸ்ணகுமார் நேற்று(1)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

கல்முனை பாண்டிருப்பு மண்ணின் சொத்துக்களில் ஒன்றாக இருந்த இவர் 3பிள்ளைகளின் தந்தையாவார். மகனொருவர் மருத்துவபீட மாணவராவார்.

கல்முனைப்பிராந்திய தமிழ்முஸ்லிம் மக்களின் மனங்களில் நீங்காஇடம்பிடித்த டாக்டர் கிருஸ்ணகுமார் தனது 60வது வயதில் இவர் காலமானார்.
மரணிப்பதற்கு முதல்நாள்பகல்கூட களுவாஞ்சிக்குடிப்பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவரைக்கண்காணித்துவிட்டே வந்திருக்கிறார்.

பட்டிப்பளை வெல்லாவெளி சுகதார வைத்திய அதிகாரியாகவிருந்து படுவான்கரைப் பிரதேச பின்தங்கிய கிராமங்களின் சுகதாரத் தேவைகளைக் கவனித்து மேம்படுத்துவதிலும் கர்ப்பிணித் தாய்மார் கிளினிக் நிலையங்களையும் பல விஷேட வைத்திய முகாம்களையும் செயற்படுத்தி மக்களுக்கான மகத்தான சேவைகளையும் வழங்கி சக வைத்தியர்கள்தாதியர்கள்ஊழியர்களோடும் சிறந்த உறவை பேணி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களின் சுகாதாரத் தேவைகளை சிறப்பாகக் கையாண்டவர்.

தற்போது கூட வெல்லாவெளி  பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாகவிருந்து போரைதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கிராமங்களில் கொரோனா தொற்றை தடுப்பதில் மிகவும் காத்திரமாகப் பணிபுரிந்து மக்களால் நேசிக்கப்பட்ட வைத்தியர்.
மக்கள் நேசித்த மனித நேயம் கொண்ட சிறந்த மனிதரான இவரது இழப்பு  மக்களுக்குப் பேரிழப்பாகும்.