கொக்கட்டிச்சோலை – பனிச்சையடிமுன்மாரி கொரோனா நோயாளி சிகிச்சைக்காக அழைத்துசெல்லப்பட்டார்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமசேவையாளர் பிரிவின் பனிச்சையடிமுன்மாரி கிராமத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தொற்றாளர் சிகிச்சைக்காக இன்று(30) வெள்ளிக்கிழமை கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு விசேட காவுவண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த நபர் கொழும்பிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 25ம் திகதி தமது சொந்த கிராமமான பனிச்சையடிமுன்மாரி கிராமத்திற்கு வருகைதந்திருந்த நிலையில், தமக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த 28ம் திகதி சிகிச்சைப் பெறுவதற்காக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு சென்றிருந்த நிலையில், அங்குமேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் நேற்று(29) கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று(30) காலை குறித்த நபரின் வீட்டிற்கு சென்றிருந்த சுகாதார பரிசோதகர்கள், காவல்துறையினர் உரிய நபரினை சிகிச்சைக்காக விசேட காவுவண்டி மூலம்; வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், குறித்த நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் என்றவகையில் 21பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தொற்றாளரின் வீடு அதனை அண்டிய பிரதேசங்களில் தொற்று நீங்கி விசுறப்பட்டதுடன், குறித்த பகுதியில் இருந்து தேவையற்ற அநாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.