வாழைச்சேனை பிரதேசத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசம்  முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசமாக நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்துள்ளதாக பிரதேச பொலிசார் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
 பொலிசார்,இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட காவல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.வீதியோரங்களில் பலத்த சோதனை நடவடிக்கைள் இடம்பெற்று வருகின்றன.
வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் போக்குவரத்து,சந்தைகள்.வியாபார நிலையங்கள் என்பன இயங்கவில்லை.மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது வரை 11 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் நேற்று (சனிக்கிழமை) 20 பேருக்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை 80 பேருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை இடம்பெற்று வருவதாகவும் அதன் உத்தியோக பூர்வ முடிவுகள் பெறப்பட்ட பின்னர் மேலதிக எண்ணிக்கை தொடர்பான விபரம் அறிவிக்கப்படும் என உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் ஜீ.எஸ்.ஜெயசுந்தர தெரிவித்தார்.
பெலியகொட மீன் சந்தைப் பகுதிக்கு வியாபார நடவடிக்கைக்காக சென்று வந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பு பட்டவர்களை கண்டறியும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக   பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக சனிக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட கலந்துரையாடல் உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர். தலைமையில் நடைபெற்றது.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுச் சௌக்கிய பரிசோதகர்கள்.
பிரதேச சபை தவிசாளர்கள்,பிரதேச செயலாளர்கள் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள  கொரோனா தொற்று நோயினை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பன தொடர்பான முன்னெச்செரிக்கை விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன.
வாழைச்சேனை (206).பிறைந்துறைச்சேனை.செம்மன் ஓடை,மீராவோடை.போன்ற கிராமசேகர் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்னர்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை பேனி முகக் கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் வீதிகளில் தேவையில்லாமல் செல்வதனை தவீர்க்குமாறும்,அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் இருந்தால் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறும்  இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.
 இதேவேளை வாழைச்சேனை மீன் பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.தகவல் அறிந்த பொதுமக்கள் அச்சமடைந்து காணப்பட்டனர். வாழைச்சேனை சந்தைப் பகுதியில் முண்டியயடித்துக்கொண்டு தமது நுகர்வுப் பொருட்க்களை நுகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதனையடுத்து பிரதேசத்தில்  மக்கள் கூடும்  பொது இடங்களில் தொற்று நீக்கி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. வாழைச்சேனை துறைமுகம்,ஓட்டமாவடி மீன் சந்தைப் பகுதிகளில்  பொலிசார் இவ் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
தண்ணீர் பீச்சும் இயந்திரத்தின் உதவியுடன் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.