சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள்அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன்

தன் மீது  வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் ஊழியர்கள் சிலரினால் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள்அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என மட்டக்களப்பு  நாவற்குடா யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தங்கள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்வதாக வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், கடந்த மூன்று வருடங்களாக இந்த வேதனைகளை அனுபவித்து வருவதாகவும் தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ஆண் ஊழியர்களையும் அங்குள்ள பெண் ஊழியர்களுடன் இணைத்து அபாண்டமான வதந்திகளையும் பரப்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்ட அவர்கள், தன்னை அனுசரித்து நடக்காவிட்டால் பழிவாங்கப்படுவீர்கள் என பொறுப்பதிகாரி அச்சுறுத்துவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தன்மீது அடிப்படையற்ற, ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தெரிவித்தார்.

நேற்று மாலை நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நிறுவன மட்டத்தில்,திணைக்கள மட்டத்தில், அமைச்சு மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த ஊடக சந்திப்பை நடத்தி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று பொலிஸ் நிலையத்திலும் உள்நோக்கோடு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நீதியான நியாயமான விசாரணை ஒன்று நடைபெற்று உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் அறிய விரும்புவோர் என்னுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும் அல்லாதுவிட்டால் வைத்தியசாலையுடன் தொடர் கொள்ள முடியும்.

இந்த வைத்தியசாலையில் அனைத்து ஊழியர்களும் கடமையாற்றுகின்றார்கள். அனைவரும் சந்தோஷமாக கடமையாற்றுகின்றனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு சிலர் தூண்டி விடுகின்றனர். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு வைத்தியசாலையை விட்டு வெளியேறுவதற்கு நான் ஆயத்தமாகவுள்ளேன்” என டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன் தெரிவித்தார்.