20வது திருத்தம். இதன் நோக்கம் என்ன? நாட்டு நலனா? மக்கள் நலனா? அப்படியெனின் ராமாண்ய அமரபுர நிக்காயக்களின் பீடத்தலைவர்கள் இதை ஏன் எதிர்க்க வேண்டும்? பௌத்தபீடங்களே ஆமோதிக்காத திருத்தம் இது. அப்படியெனில் இருபதாவது யாருக்காக? சிங்கள மக்களின் நலனுக்காகவா? அல்லது பௌத்தமத நலனுக்காகவா? அல்லது அதிகாரம் மிக்கவரின் அதிகாரத்தை பலப்படுத்தவா? அல்லது அண்ணனை பலவீனப்படுத்தவா? என்று பாராளுமன்றத்தில் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற 20 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர், கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மாற்றம் ஒன்றே மாறாதது. அதுபோல ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது மாற்றத்திற்குட்படுத்தமுடியாத மன்னர் காலக்கல்வெட்டு அல்ல. நாட்டின் நலன் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக அம்மாற்றம் நிகழின் அது ஏற்கப்படவேண்டியதே.
எமது அண்டை நாடான இந்திய நாட்டின் அரசிலமைப்பு தனது 74 வருட காலத்தில் 2019ம் ஆண்டு 104வது திருத்தத்தை மேற்கொண்டது இங்கு நோக்கத்தக்கது. எமது அரசிலமைப்பு கூட தனது 42 வருட காலத்தில் 20வது திருத்தத்தை இன்று நாடி நிற்கின்றது.
இரு நாட்டின் திருத்தங்கள்- அதற்கான காலங்கள் தொடர்பாக ஒப்பீடு செய்வது எனது நோக்கமல்ல. இந்திய அரசியலமைப்பு திருத்தங்களின் நோக்கம் பன்மைத்துவ இந்தியாவின், பல்லின இந்தியாவின், பல்மத இந்தியாவின், பல்மொழி பேசும் இந்தியாவின் மக்களதும் நாட்டினதும் ஒருமைப்பாட்டையும் இன மத மொழிக் குழுக்களிடையே ஏற்றத்தாழ்வினை அகற்றவும், பிரிவினைவாதம் தோற்றுவிப்பதனை தடுப்பதும், இந்திய ஒருமைப்பாட்டை பேணுவதுமாகவே இருந்தது.
இதனால் தான் இன்றும் ஒருமித்த இந்தியாவாக உலகவரைபடத்தில் நிலைத்து நிற்கின்றது. ஆனால் எமது நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 19 திருத்தங்கள் உட்பட இன்றைய 20வது திருத்தம் வரை எந்த நோக்கங்களுக்காக நிறைவேற்றப்பட்டது.
நாட்டுநலன் கருதியா, மக்கள் நலன் கருதியா, இன மத மொழி சமத்துவம் கருதியா ஏற்படுத்தப்பட்டது? இதுவே இந்திய அரசியலமைப்பு திருத்தங்களுக்கும், எமது நாட்டு அரசியலமைப்பு திருத்தங்களுக்குமிடையேயான வேறுபாடு.
20 திருத்தங்களில் இருந்து ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் சில திருத்தங்களையும் அதற்கான காரணங்களையும் சுருக்கமாக ஒரு வரியில் தருகின்றேன். எமது அரசியலமைப்பின் 2வது திருத்தம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை என்ற தனிமனிதர் அரசாங்க கட்சிக்கு மாறியவேளை அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை காப்பாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது.
4வது திருத்தம் முற்றுமுழுதான ஜனநாயக விரோதமாக பொதுத்தேர்தல் நடத்தாது பாராளுமன்ற அயுட்காலத்தை நீடிக்க கொண்டுவரப்பட்டது. 6வது திருத்தம் நாட்டின் ஒருமைப்பாட்டினை காப்பாற்றுவது எனும் பெயரில் தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றிலிருந்து அகற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது.
13வது திருத்தம் நாட்டின் ஒரு இனக்குழுவான தமிழ்மக்களது உணர்வுகளை புரியதா அரசுகளின் நடத்தை காரணமாக இந்நாட்டின் உள்விவகாரங்களில் இந்திய தலையீட்டுக்கு வழிவகுத்தது. 18வது திருத்தம் யுத்த வெற்றி கதாநாயகன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது அதிகாரத்தை அதிகரித்து தொடர்ந்தும் ஜனநாயக வழியில் மன்னராக உருவகிக்க ஏற்படுத்தப்பட்டது.
19வது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறியாமை, இயலாமை என்பவற்றை பயன்படுத்தி இலங்கை அரசியலில் மாமனை வென்ற கபடத்தனம் கொண்ட ரணிலின் அதிகாரத்தை பலப்படுத்த ‘ஜனநாயக முலாம் பூசி” ஏற்படுத்தப்பட்டது.
இன்று 20வது திருத்தம். இதன் நோக்கம் என்ன? நாட்டு நலனா? மக்கள் நலனா? அப்படியெனின் ராமாண்ய அமரபுர நிக்காயக்களின் பீடத்தலைவர்கள் இதை ஏன் எதிர்க்க வேண்டும்? பௌத்தபீடங்களே ஆமோதிக்காத திருத்தம் இது. அப்படியெனில் இருபதாவது யாருக்காக? சிங்கள மக்களின் நலனுக்காகவா? அல்லது பௌத்தமத நலனுக்காகவா? அல்லது அதிகாரம் மிக்கவரின் அதிகாரத்தை பலப்படுத்தவா? அல்லது அண்ணனை பலவீனப்படுத்தவா?
20வது திருத்தம் நாட்டு மக்கள் அனைத்து தரப்பினரதும் விருப்பமின்றி அதிகாரம் மிக்கவர்களின் விருப்பத்திற்கேற்ப தலையாட்ட கையுயர்த்த தயாராக இச்சபையில் பலர் இருந்தாலும் அவர்களது மனச்சாட்சி அவர்களுக்கு தெரியும்.
அடுத்த செல்வாக்கு மிக்கவர் ஆ.சு எனும் மகிந்த ராஜபக்ச.(அவரும் தனக்கு 2ஃ3 பெரும்பான்மையை சாம பேத கானம் மூலம் பெற்றவர். யுத்தத்தை வென்ற தலைவர் என்பதனால் மன்னர் அளவுக்கு மக்களால் புகழ் பெற்றவர்) ஆ.சு பற்றி நன்கு அறிந்தவன் நான். அடிப்படையில் அவர் இனவாதியோ மதவாதியோ அல்ல. ஆரம்பத்தில் அவர் ஒரு மனித உரிமைப்போராளியாக மிளிர்ந்தவர். எனது பாராளுமன்ற முதல் பிரவேசத்தில் அவரது மனித உரிமை ஆர்வத்தை ஆக்ரோசத்தை அவர் அருகில் பாராளுமன்றிலிருந்து பார்த்தவன்.
மனித உரிமை தொடர்பாக ஜெனிவா பயணத்தின் பிதாமகன் என்று கூட அவரை அழைக்கலாம். ஆனால் அதிகாரவெறி அவரை அடியோடு மாற்றிவிட்டது. யுத்தத்தை வென்றார். பெரும்பான்மை மக்களின் மனம் கவர்ந்தார். சர்வதேசத்தின் முன் தன் பெரும்பான்மை முகம் காட்டவில்லை. சர்வதேசத்துக்கு எம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு 13பிளஸ் எனும் கருதுகோளை ஏற்படுத்தி சர்வதேசத்தை இணங்கச்செய்தவர் இவர். ஆனால் 13பிளஸ் எனக்கூறியே 13ஐ மைனஸ் ஆக்கிய பெருமைக்குரியவர்.
.. ராஜபக்ச ஒன்றும் இனவாதியல்ல. ஆனால் பு.சு இன்று இனவாத முகமூடியுடன் உள்ளார்.
நாம் நமது நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஊடாக இறுதி அத்தியாயத்தில் உள்ளோம். இந்த 20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் இந்த குழுநிலை விவாதத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன இந்த 20வது திருத்தத்தில் அதிகாரக்குவிப்பை தவிர்த்து அர்த்தமுடன் கூடிய அதிகாரப்பரவலாக்கல் சரத்துக்களை இணைத்து நாட்டின் பல்லின் பல்மத இரு மொழி சமத்துவத்தை ஏற்கக்கூடிய திருத்தங்களை ஏற்படுத்த முயல வேண்டும்.
அதனூடாக கோத்தபாய ராஜபக்ச இந்நாட்டின் வரலாற்றில் முன்னுதாரண புருசராக பதியப்படவேண்டும். அதற்கு அவர் முயல்வாராக! அப்படி அவர் செய்தால் இந்நாட்டின் அரசியல் தலைவர்களில் புதியதொரு தேசபிதாவாக அவர் மிளிர்வார். இல்லையெனில் அவரது வரலாறு நடுநிலை வரலாற்றாசிரியர்களால் வேறு விதமாகவே பதிவு செய்யப்படும். வரலாறு எவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை 20வது திருத்த குழுநிலை விவாதம் என்ன திருத்தங்களை செய்கின்றது என்பதிலேயே தங்கியுள்ளது.
எமது உளக்கருத்து எமது அரசியல் அபிலாஷை இது. இனி நாட்டின் சுபீட்சம் உங்கள் கையில் தங்கியுள்ளது என்றார்.