சிரேஸ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20வது நினைவு தினம் இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு 20சிட்டிகளில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிர்நீர்த்த ஊடகவியலாளருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் எஸ்.நிலாந்தன்,பொருளாளர் பு.சசிகரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் நாள் இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட வேளையில் கூட தான் பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகங்களிற்கு செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்த போதே சுடப்பட்டிருந்தார் என்பதுடன். அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும் இதன் போது படுகாயப்படுத்தப்பட்டிருந்தனர்.
பிபிசி தமிழோசை,அதன் சிங்கள சேவையான சந்தேசிய உள்ளிட்ட வானொலிகள், நாளிதழ்கள், ராவய உள்ளிட்ட தமிழ் சிங்கள வார இதழ்களென தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இன்றைய நினைவேந்தலின்போது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்கள், தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தமது கடமையினை முன்னெடுப்பதற்கான சூழ்நிலையினை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.