கிழக்கில் காணிப்பிரச்சினைக்கு 50வழக்குகள் தாக்கல்செய்யப்படும்!

காரைதீவில் த.தே.கூ.பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. 
 (வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கில் அரசாங்கம் நிலம் சம்பந்தமாக பலவித அழுத்தங்களைப்பிரயோகித்துவருகின்றது. அதனால் கிழக்கு மாகாணத்தில் இன்று நிலப்பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. அவற்றுக்கெதிராக சுமார் 50 வழக்குகளைத் தாக்கல் செய்யவிருக்கிறோம்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று  காரைதீவில்வைத்துத் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் அழைப்பின்பேரில் இன்று  காரைதீவுக்கு விஜயம் செய்த அவர் ஊடகத்திற்கு கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. அச்சமயம் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்களான த.மோகனதாஸ் திருமதி சி.ஜெயராணி மற்றும் இ.த.அ.கட்சியின் இளைஞரணிஉபசெயலாளருமான அ.நிதான்சனும் சமுகமளித்திருந்தனர்.

அங்கு சுமந்திரன் மேலும் கருத்துரைக்கையில்:
கிழக்கில் அரசாங்கம் நிலம் சம்பந்தமாக பலவித அழுத்தங்களைப்பிரயோகிக்கிறது. இந்தஇடத்தில் ஜனநாயகக்கட்டமைப்புகளை தொடர்ச்சியாகப் பேணவேண்டியது எமது கடமையாகும்.இன்று பொத்துவிலுக்குச் செல்கிறேன்.அங்கு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை ஒன்றுக்காக. இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளன.

அதேபோன்று  திருகோணமலை திரியாயகாணிப்பிரச்சினை  மட்டக்களப்பு எல்லைக்காணி பிரச்சினை என நிறையப்பிரச்சினைகள் உள்ளன.இதில் தொல்பொருளியல் வனப்பாதுகாப்பு என பலதரப்பினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

முன்பு வடக்கில் இராணுவத்தினர் தமிழ்மக்களின் காணிகளை கையகப்படுத்தினர்.அதற்கெதிராக நிறைய வழக்குகளைபோட்டு தீர்வுகண்டோம்.அதேபோன்று இன்று கிழக்கிலும் குறைந்தது 50 தொடக்கம் 100வழக்குகள் போடவேண்டும்.

20வது திருத்தம் பற்றி….

20வது திருத்தத்தை நிறைவேற்ற அனுமதித்தால் இந்த நாட்டில் முழுமையான ஜனநாயகமுறைமைகளுக்கு ஆப்பு  வைக்கப்படும். அதாவ சர்வாதிகாரப்போக்கிற்கு வித்திடும்.

20வது திருத்தத்தை நாம் பூரணமாக எதிர்க்கிறோம். அதில் ஒரு விடயத்தில் இப்போதே வெற்றிபெற்றிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு இல்லை . அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கலாம்.பாராளுமன்றத்தை இரண்டரைவருடத்துள் கலைக்கமுடியாது.

சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதில் சுயாதீனமில்லை. அவர் அதைச்செய்யலாம். ஆனால் முதலில் கூறியதுபோல ஜனாதிபதியின் அனைத்து செயற்பாடுகளையும் சவாலுக்கு உட்படுத்தலாம் என்ற சட்டத்தின்கீழ் சுயாதீன ஆணைக்குழு உருவாக்கலையும் சவாலுக்குட்படுத்தலாம். பொருத்தமில்லாத நியமனங்களையும்  நாம் எதிர்க்கலாம்.

குறிப்பாக கிழக்கில் மட்டும் உருவாக்கப்பட்ட தொல்லியல் செயலணியை கேள்விக்குட்படுத்துவோம். திருகோணமலையில் தொல்லியல்செயலணியின் தாக்கம் கூடுதலாக உள்ளது. குறிப்பாக குச்சவெளி பிரதேசத்தில் மட்டும் அதிகூடிய 36இடங்களில் காணிப்பிரச்சினைகள் உள்ளன.

மட்டக்களப்பு எல்லைக்காணிப்பிரச்சினை தொடர்பிலும் அரசஅதிபர் மாற்றம் தொடர்பாக நாம் எமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். பாராளுமன்றிலும் எதிர்த்துக்குரல் கொடுப்பேன்.

மட்டக்களப்பு எல்லைக்காணிப்பிரச்சினை மகாவலி அதிகாரசபையுடன் தொடப்புபட்டது. அதறகும் ஆளுநருக்கும் தொடர்பில்லை. எனவே நாம் மகாவலி சபைக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்வோம்.

தமிழ்மக்களுக்கு சட்டரீதியாக நியாயம் என்று ஏதாவது தீர்வுவழங்கபுறப்படும் அரசஅதிகாரிகளுக்கெதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதை நாம் வெறுமனே கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.மட்டக்களப்பு அரசஅதிபர் விடயத்தில் நாம் கண்டனம்வெளியிட்டுள்ளோம். விரைவில் அதற்கான
நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளோம். என்றார்.