அடம்பிடித்த கிழக்கு ஆளுநர் நீதிமன்றம் செல்லவுள்ள கூட்டமைப்பு.

0
346

வேதாந்தி

மட்டக்களப்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மேய்ச்சல்தரைகாணிகளை வெளிமாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் அத்துமீறி பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக அதனை தடுத்துநிறுத்துமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் கிழக்குமாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டகோரிக்கை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாம் நீதிமன்றம் செல்லவுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் தெரிவித்தனர்.

இதுவிடயம் சம்பந்தமாக நேற்று திருமலையில் கிழக்குமாகாண ஆளுநருக்கும், கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது.  பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன், இரா.சாணக்கியன், முதல்வர் தி.சரவணபவான் ,முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார், முன்னாள் காணி ஆணையாளர் க.குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவிடயமாக தெரியவருவதாவது,

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள  மயிலத்தமடு, மாதவணை கிராம சேவகர் பிரிவுகளில் அம்பாறை மற்றும் பொலன்னறுவ மாவட்ட விவசாயிகள் சுமார் மூவாயிரம் ஏக்கர் காணியில் அத்துமீறி குடியேறி காடுகளை வெட்டி சேனைப் பயிர்ச் செய்கைக்குத் தயாராகிவருகின்றனர்.

இதனால் பெரும்போக நெற்செய்கையின்போது இம்மாவட்டத்தின் செங்கலடி, கிரான், பட்டிப்பளை, வெள்ளாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட சுமார் ஆயிரம் கால்நடை வளர்ப்பாளர்களின் இரண்டு இலட்சம் கால்நடைகளை பாரம்பரியமாகக் கொண்டு செல்லும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

இதனை ஆளுநரிடம் விளக்கியபோதும் ஆளுநர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் சுபீட்சத்துக்கு தெரிவித்தார்.

இச்சந்திப்பு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கருத்து தெரிவிக்கையில்

இனத்தின் அடிப்படையில் நில எல்லைகளை வரையறுப்பது அவரது கொள்கையும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல சிங்களவர்களுக்கோ, தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்த நில ஒதுக்கீடும் செய்யப்படவில்லை அரசியல் நோக்கங்களுக்காக இதுபோன்ற ஒதுக்கீடுகள் செய்யக்கூடாது.

இனக்குழுக்களை இலக்காகக் கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒருபோதும் நடவடிக்கை எடுக்க மாட்டேன் எ, மாகாணத்தில் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக சேவை செய்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும், மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க அனைத்து தரப்பினருடனும் ஒரு சிறப்பு கலந்துரையாடலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்  தெரிவித்தார்..