கொரோனாவுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!

கல்முனைகல்வி மாவட்டத்தில் 72நிலையங்களில்பரீட்சை.
(காரைதீவு நிருபர் சகா)

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் கொரோனாவின் மூன்றாவதுஅலை  தாக்கத்திற்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை நாடுபூராக ஆரம்பமானது.

கல்முனைப்பிராந்தியத்திலும் நேற்று மாணவர்கள் சுகாதாரநடைமுறைகளைக்கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பரீட்சை மண்டபங்களுக்கு  சமுகமளித்தனர்.

கல்முனைக்கல்வி மாவட்டத்தில் 72பரீட்சைநிலையங்களில் 10331பரிட்சார்த்திகள்பரீடசைக்குத் தோற்றுகின்றனர். 09 இணைப்புநிலையங்கள்செயற்படுகின்றன.

திங்கட்கிழமை ஆரம்பமான இப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள 2684 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.
இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 362824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்கு இதுவரை அதற்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காதிருந்தால் விண்ணப்பதாரர் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உபயோகித்து பயிற்சி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் பரீட்சை நிலையங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளை இணைத்துக்கொண்டு பரீட்சை நிலையங்களில் கிருமித் தொற்று நீக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பரீட்சை நிலையங்களுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகள் அதிபர்கள் பிரதி அதிபர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்