கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை இன்று(6) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் பகுதி வரையான 13 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் ஒலிபெருக்கி வாயிலாக கொரோனா தொற்று நோய் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் என கண்டுபிடிக்கப்பட்ட இரு கம்பஹா ஆடைதொழிற்சாலை பணியாளர்களை அழைத்து வந்த பஸ் நடத்துநரை மருதமுனை பகுதியில் அடையாளப்படுத்தி உள்ளோம்.அத்துடன் அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோரை இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளோம்.இன்று மேற்கொள்ளவுள்ள இப்பரிசோதனையின் முடிவு நாளை கிடைக்கப்பெற்ற பின்னர் தான் கல்முனை பிராந்தியத்தில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை தெரிவிக்க முடியும்.
அத்துடன் சமூக வலயத்தளத்தில் செய்திகளை பதியவிடுபவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பிரசுரிக்க வேண்டும். வதந்திகளை பரப்பாது உரிய தரப்பினரை இனங்கண்டு தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார் இவ்விழிப்பூட்டல் ஆரம்ப நிகழ்வில் கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையின் தொற்று நோய் பிரிவின் வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் இராணுவ மேஜர் தேசப்பிரிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.