மசூர் மௌலானா மைதானம் பசுமைமிக்கதாக அபிவிருத்தி செய்யப்படும்; -இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுர டி.சில்வா-

0
73

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அம்பாறை மாவட்டத்தில் உதைபந்தாட்டத்துறையை மேம்படுத்தும் பொருட்டு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் அனைத்து வசதிகளும் கொண்டதாக பசுமைமிக்க மைதானமாக அபிவிருத்தி செய்யப்படும் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி.சில்வா தெரிவித்தார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.அப்துல் மனாபை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கல்முனை அல்பஹ்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வை.கே.ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அனுர டி.சில்வா மேலும் தெரிவிக்கையில்;

“இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த எம்.பாறூக் பணியாற்றி வந்த நிலையில், அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அப்பதவியை இந்த மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே அப்துல் மனாபை உப தலைவராக நியமிக்கத் தீர்மானித்தோம். இப்பதவிக்காக இங்கிருந்து பலரது பெயர்கள் முன்மொழியப்பட்ட போதிலும் உதைபந்தாட்டத்துறைக்கு ஆற்றிய நீண்ட கால சேவைகள் மற்றும் திறமைகள் என்பவற்றை கவனத்தில் கொண்டு அப்துல் மனாபை தெரிவு செய்தோம்.

அவர் இப்பதவி ஊடாக அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரமல்லாமல் முழுக் கிழக்கு மாகாணத்தினதும் விளையாட்டுத்துறைக்கு பாரிய பங்களிப்பை செய்ய வேண்டிய பொறுப்பை சுமந்திருக்கிறார். நாம் அவர் மூலமாக எமது சம்மேளனத்தின் பணிகளை இங்கு முன்னெடுப்போம். மாவட்ட ரீதியாக நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இப்பிராந்தியத்தில் மசூர் மௌலானா விளையாட்டுத் தொகுதி மைதானம், சந்தாங்கேணி மைதானம் என்பன முக்கிய மைதானங்களாக இருக்கின்றன. இவற்றில் ஒன்றை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். இவற்றுள் மசூர் மௌலானா மைதானம் எமது சம்மேளனத்தின் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதற்காக இரண்டு உத்தியோகத்தர்களை நியமித்துள்ளோம். அவர்களுக்கு சம்பளமும் வழங்கி வருகின்றோம். இதனை அபிவிருத்தி செய்வது எமக்கு இலகுவாக இருக்கும்.

இம்மைதானத்தை காலத்திற்கு காலம் அபிவிருத்தி செய்து வருகின்றோம். இதனை மீண்டும் செப்பனிட்டு, புற்றரையாக பசுமையாக்கித் தருவதற்கு எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும். விரைவில் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். அத்துடன் இப்பிராந்திய உதைபந்தாட்ட வீரர்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்துவோம்” என்றார்.

இந்நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜஸ்வர் உமர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றிருந்தனர். இதன்போது அதிதிகளினாலும் பல்வேறு விளையாட்டுக் கழகங்களினாலும் அப்துல் மனாப் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.