கடலரிப்பால் மாளிகைக்காடு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பேராபத்து!

வாடிகள் கிணறுகள் கடலுக்குள்.. மையவாடி மதில் இடிந்துவீழ்ந்துள்ளது.
கடற்றொழில் அமைச்சர் கவனிப்பாரா? மீனவர்பிரதிநிதி ஜப்பார் வேண்டுகோள்.
(காரைதீவு சகா)

காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கடற்கரைப்பிரதேசம் அண்மைக்காலமாக பாரிய கடலரிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் மாளிகைக்காடு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்படும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை மாளிகைக்காடு கடற்கரைப்பிரதேசத்தில் சுமார் 50மீற்றர் கரைப்பகுதியை கடல் காவுகொண்டுள்ளது. அப்பகுதியிலிருந்த தென்னைமரங்கள் வாடிகள் கிணறுகள் என பல கடலுக்குள் மூடுண்டுள்ளன.

தற்போது தொடர்ந்தும் கடலரிப்பு இடம்பெற்றுவருவதால் பலவாடிகள் கிணறுகள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்படும் அபாயம் நிலவுவதோடு மீனவர்கள் மீன்பிடித்தொழிலை செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது என மீனவர்சங்கப்பிரதிநிதி ஏ.பி.ஏ.ஜப்பார் தெரிவித்தார்.

மாளிகைக்காடு கடற்கரையில் சுமார் 20மீன்வாடிகள் உள்ளன. 100ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகுகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 4000பேர் ஈடுபட்டுள்ளனர். மறைமுகமாக மீன்வியாபாரிகள் தரகர்கள் மீன்வெட்டுபவர்கள் கடைக்காரர் என சுமார் 10ஆயிரம் பேர் இத்தொழிலை நம்பியிருக்கின்றனர்.

கடலில் பிடிபடும் மீன்களை மொத்தமாக கடற்கரையில்வைத்து கூறிவிற்பது வழக்கம். தற்போது அப்பிரதேசம் கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் மீன்கள் மிகவும் குறுகிய பரப்பிற்குள் விற்கவேண்டிய துர்ப்பாக்கியநிலைதோன்றியுள்ளது. மேலும் படகுகளை தோணிகளை கரையில் இழுத்து கரைசேர்ப்பதும் நிறுத்திவைப்பதும் ஆபத்தாகஉள்ளதாக ஜப்பார் மேலும் தெரிவித்தார்.

மாளிகைக்காடு கடற்கரைப்பிரதேசத்தில் கடற்றொழிலை ஜீவனோபாயமாகக்கொண்ட சுமார் 10ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்சங்கப்பிரதிநிதி ஏ.பி.ஏ.ஜப்பார் தெரிவிக்கிறார்.
ஒலுவில் துறைமுகத்தில் மண்மூடி 2வருடங்களாக அங்கு எமது இயந்திரப்படகுகளை உள்கொண்டுசெல்லமுடியாது. அதைத்தோண்டி வகைசெய்தால் ஓரளவாவது படகுகளைக்காப்பாற்றமுடியும் என்றார்.

கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் திணைக்களம் எமது அவலநிலையை வந்துபார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை அருகிலுள்ள அந்நூர் ஜூம்மா பள்ளிவாசலின் மயானத்தின் (ஜனாசா மையவாடி) சுற்றுமதில் கடலரிப்பால் இடிந்துவீழ்ந்துள்ளது. இதனால் அங்கு புதைக்கப்பட்டிருந்த பிரேதங்கள்(ஜனாசாக்கள்) வெளியில் தள்ளப்பட்டுவருகின்றன. இதனைத்தடுத்துநிறுத்தி கல்வேலி அல்லது மண்மூட்டைகள் அடுக்கப்படவேண்டும் என பள்ளிவாசல் நிருவாகத்தினர் கோரிக்கைவிடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.