மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல் நிலங்கள் மற்றும் குளங்களில் மணல் அகல்வதற்கு தடை

மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுகு;கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வயல் நிலங்கள் திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழ்தல் நடவடிக்கைகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையும் பாதிப்படைந்து வருகின்றது.
மேலும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குரித்தான குளங்களிலிருந்தும்  கனிசமான மணல் அகழ்வதனால் இவற்றின் ஆழம் அளவுக்கதினமாக அதிகரிக்கப்படுவதுடன் இங்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும் இத்திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின் அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தார்.