முடங்கியது வடகிழக்கு பிரதேசம்

(ந.குகதர்சன், பாறுக் ஷிஹான், ரீ.எல்.ஜவ்பர்கான், வி.சுகிர்தகுமார், வாஸ் கூஞ்ஞ)

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் வடகிழக்கில்  நேற்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்கள் மிக வரவு குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவைகள் சேவையில் ஈடுபட்டுள்ள அதேவேளை தூர இடங்களுக்கான சேவைகளில் தனியார் பஸ்கள் ஈடுபட்டன..

அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளபோதிலும் மக்கள் வருகை மிகவும் குறைவான நிலையிலேயே காணப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்..

பாடசாலைகளில் மற்றும் அலுவலகங்களில்  புலனாய்வுத்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.இன்றைய தினம் கடமைக்கு சமூகம் தந்தவர்கள் சமூகம் தராதவர்கள் தொடர்பான விபரங்கள் புலனாய்வுத்துறையினரால் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம்  நேற்றைய தினம் முஸ்லிம் பிரதேசங்களில் வழமைபோன்று செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையினை  அம்பாறை மாவட்ட   மக்கள் அதனை  நிராகரித்து வழமையான செயற்பாட்டில் திங்கட்கிழமை(28) ஈடுபட்டனர்..

அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

இம்மாவட்டத்தில்  வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.  இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு,  நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட   முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம்  அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று  பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம்  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன்  கல்முனை பொது சந்தை  உட்பட அதனை சூழ உள்ள  பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.   மேலும்  வியாபார நிலையங்கள் ,சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள் , பாமசிகள்,  வங்கிகள் ,எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

எனினும் சில இடங்களில்  பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

இறந்தவர்களை அவர்கள் உறவினர்கள் நினைவு கூறும் உரிமையை இந்த சமகால அரசு தடுத்தமைக்கு எதிராக நேற்று திங்கள் கிழமை (28.09.2020) வடக்கு கிழக்கு பகுதிகளில் பூரண முடக்கு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மன்னார் பகுதியிலும் இவ் முடக்கு போராட்டாம் இடம்பெற்றிருந்தது. இவ் பகுதியிலுள்ள பாடசாலைகளில் கனிசமான மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

மன்னார் நகருக்குள் இயங்கி வரும் முக்கிய பாடசாலைகளான மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 1666 மாணவர்களில் 526 மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். இவ் பாடசாலையில் 96 ஆசிரியர்களில் 73 பேர் மட்டும் வருகை தந்திருந்ததாக இவ் வட்டாரம் தெரிவித்தது.

மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் 83 ஆசிரியர்களில் 67 பேர் மட்டும் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். அத்துடன் 1382 மாணவர்களில் 366 பேர் மட்டும் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

மன்னார் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் 70 ஆசிரியர்களில் 58 பேர் மட்டும் சமூகமளித்திருந்ததுடன் அவ் பாடசாலையிலுள்ள 650 மாணவர்களில் ஒரு சிலர் பாடசாலை வரை வந்துவிட்டு உடன் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் இவ் பாடசாலையில் மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இவ்வாறு இப் பகுதியிலுள்ள மன்னார் கல்வி வலயப் பகுதியில் 86.7 வீதமான ஆசிரியர்கள் வருகை தந்திருந்தபோதும் மாணவர்கள் வருகை வழமையைவிட வெகுவாக குறைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 68.36 வீதமான மாணவர்களே இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாக மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் பிறட்லி தெரிவித்தார்.

மேலும் மன்னார் நகர் மற்றும் பல இடங்களில் தமிழ் முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுக் காணப்பட்டன. சந்தைகளும் செறிச்சோடி இருந்தன.

அதேவேளையில் இலங்கை போக்குவரத்து, தனியார் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சேவைகள் வழமைபோன்று சேவையில் ஈடுபட்டதையும் நோக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் பயணிகள் தொகை வெகுவாக குறைந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

வீதிகளில் பொலிசாரின் பிரசனம் மிக குறைவாக காணப்பட்டதுடன் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்திலும்  முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள்  மூடப்பட்டதுடன். பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பதுடன், பாடசாலைகளும்  மூடப்பட்டு காணபட்டன.

மேலும் பொதுமக்களின் நடமாட்டம் வீதிகளில் குறைவாகவே  இருந்ததுடன், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்ட அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

அரச திணைக்களங்கள் மற்றும் உணவகங்கள் என்பன திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் செயலாளரின் வர்த்தக நிலையம் உட்பட சில தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்ததையும் அவதானின்ன முடிந்தது.