இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களுடைய சுதந்திரமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அடக்குமுறைகளின் ஊடாக தமிழ் மக்களை ஒரு அடிமைத்தனத்துக்குள் வைத்துக்கொள்ள முயசிகள் எடுக்கப்படுகின்றன.
குறிப்பாக ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், வழிபாட்டு உரிமைகளையும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையினை மாற்றியமைக்கவும், தமிழர்களை அவமதிக்கும் இந்த அரசின் செயற்பாட்டை கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைந்து விடுத்த அழைப்பினை ஏற்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்கி உள்ளனர்.
இதன் ஊடாக ஜனநாயக நீதியில் எங்களது செயற்படுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகள் குறித்து சர்வதேச சமூகமும், மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளும் அறிந்திருக்கும். அத்தோடு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில் தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதையும் முழு உலகமும் அறிந்திருக்கும்.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாநகருக்குள் வர்த்தக நிலையங்கள் உட்பட பாடசாலைகள், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து என அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி இந்த ஜனநாயக போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்கிய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள், முற்சக்கர வண்டி சாரதிகள், தனியார் போக்குவரத்து சங்கத்தினர், கல்விசார் சமுகத்தினர், இளைஞர்கள், பொது அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.