சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு  மாகாண மட்டத் தரிசிப்பு.

(காரைதீவு நிருபர் சகா)


வலயக் கல்வி அலுவலகத்தினை மேம்படுத்துதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் கிழக்கிலுள்ள 17 வலயக் கல்வி அலுவலகங்களுக்கான தரிசிப்பானது மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் தலைமையில்  நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில் சம்மாந்துறை வலயத்திற்கான தரிசிப்பு கடந்த(10) வியாழக்கிழமை  மூன்று கட்டங்களில் நடைபெற்றது.

முதற்கட்டமாக  காலை வலயக் கல்வி அலுவலகத்தில் கல்வி சாரா உத்தியோகத்தர்களுடனும் அடுத்து கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுடனும் நடைபெற்றது.பின்னர் பி.ப.2.00மணிக்கு  அல்மர்ஜான் தேசிய கல்லூரியில் அதிபர்கள் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் பகுதித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் மேற்படி 3கூட்டங்களும் நடைபெற்றன.

இதில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் வலயக் கல்விப் பிரதிக் கல்வி பணிப்பாளர்கள் உதவி கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரியர் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர். அங்கு வலயத்தின் கல்வி மேம்பாடு பற்றி கலந்துரையாடப்பட்டது.

மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் தமதுரையின் போது:
சம்மாந்துறை வலயத்தின் கல்வி அபிவிருத்தியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இன்றைய கூட்டம் உள்ளதாகவும் குறைபிடிப்பதைத் தவிர்த்து வலயத்தில் எவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பது பற்றியும் தொழில் ரீதியாக மாகாணக் கல்வித் திணைக்களத்தினூடாக அல்லது வலயக் கல்வி அலுவலகத்தினூடாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தாமதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகளுக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் 6மாதங்கள் முழுமையாக பாடசாலைகள் மூடப்பட்டும் இந்த 6 மாதமும் இழந்த கல்வியை இருக்கின்ற 4 மாதங்களுக்குள் எவ்வாறு முன்னேற்றப் போகிறீர்கள் பற்றிய சரியான திட்டமிடலை பாடசாலை மட்டங்களில் முன்னெடுப்பது குறித்தும் கடமைகளுக்கு அப்பால் செயற்படவேண்டிய தேவை உள்ளது.செயல்களில் மிகச் சிறந்த செல்வம் தர்மம்.தர்மத்திலும் மிகச் சிறந்த தர்மம் அறிவைப் போதிப்பது. அதனை  தார்மீகப் பொறுப்பாக ஏற்று செயற்பட வேண்டும் எனக் கூறினார்.