கல்முனை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்-செ.கஜேந்திரன் எம்.பி பார்வை

பாறுக் ஷிஹான்
 
கல்முனை பிரதேசத்தில்  காட்டு  யானைகளின் அட்டகாசம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி வன சீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி  மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் 9 ஆவது பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு இரண்டாவது நாளான இன்று(12) இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதற்கமைய காட்டு யானைகள் பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் பிரவேசித்து பொது மக்களை அச்சுறுத்தி வரும் செயற்பாடானது கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதனால் பொது மக்கள் அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்ற  விடயத்தினை  எனது  கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இரவு வேளையில் கூட்டமாக படையெடுத்து வந்த காட்டுயானைகளின் நடமாட்டத்தினால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இரவு வேளைகளில் தமது தேவைகளின் நிமிர்த்தம் வெளியில் வருவதற்கும் அச்சமான நிலைமையை பொது மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இப்பிராந்தியத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான யானைகளின் வருகை பயிர்ச் செய்கைகளையும் உடமைகளையும் சேதப்படுத்தி பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திஇ உயிர் ஆபத்தையும் ஏற்படுத்த வாய்ப்பாய் அமைந்துவிடும்.

கல்முனை   உள்ள நெல் வயல் காணிகளில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் அண்மித்து நிலைகொண்டுள்ள இக் காட்டு யானைகளின் கூட்டம் இரவு வேளைகளில் மீண்டும் மக்கள் குடியிருப்பு பிரதேசத்திற்குள் பிரவேசிக்க வாய்ப்புள்ளது என்பதனால் மக்கள் அச்சமடைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தி வரும் இக் காட்டு யானைகளின் கூட்டத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்  வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய அலுவலகத்தின் உதவி பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.