முஸ்லிம் கட்சிகளினது வெற்றிக் கொண்டாட்டங்களும் ஊர்வலங்களும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை

கே.எல்.அஸ்மி

ந.குகதர்சன்

பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து சுமார் ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் முஸ்லிம் கட்சிகளினது வெற்றிக் கொண்டாட்டங்களும் ஊர்வலங்களும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறான ஊர்வலங்களும் வெற்றிக் கொண்டாட்டங்களும் முஸ்லிம் சமூகத்துக்கு விடிவைத்தராது என்பதுடன், இன்றைய கால சூழலில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டுமென கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்சென்னவாறு தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள அரசு நாட்டின் மிக முக்கிய தேவைகளைப் பட்டியலிட்டு செவ்வனே நடைமுறைப்படுத்தி வருவதுடன், அரசியல் யாப்புத்திருத்தம், புதிய யாப்பு உருவாக்கம், திருமண வயதெல்லை நிர்ணயம் எனப்பல்வேறு சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மிகவும் துரித இயங்கி வருகின்றது.

இவ்வாறான சூழலில் வெற்றி பெற்ற நாம் இந்த சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய அடுத்த கட்டப்பணிகள் தொடர்பில் எந்தவிதத் திட்டமிடல்களுமின்றி, இந்த சமூகம் நம்மை வெற்றி பெற வைத்ததன் நோக்கத்தை மறந்து வெற்றி மயக்கத்தில் திழைத்துள்ளோம்.

அதே நேரம், வெற்றி பெற முடியாமல் போன முஸ்லிம் தலைமைகளும் இத்துடன் நமது பணி முடிந்து விட்டதாக எண்ணி அடுத்தவொரு தேர்தல் வரும் வரை மௌனித்துள்ளாதான தோற்றமும் காணப்படுகின்றது. வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெற முடியாமல் போனவர்களுக்கு முஸ்லிம் சமூகம் வாக்களித்துள்ளது.

அதற்கு கடமையை அவர்கள் செய்தாக வேண்டும். அதை விடுத்து, மாதக்கணக்கில் வெற்றிக்கொண்டாட்டம், ஊர்வலம் என காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பதால் நம்பி வாக்களித்த சமூகத்திற்கு எந்தவித விமோசனமும் கிடைக்கப் போவதில்லை.

எதிர்வரும் நாட்கள் எவ்வாறு அமையலாமென்பதை இன்றைய நாட்கள் கட்டியம் கூறும் வகையிலான முன்னெடுப்புக்கள் மிக வேகமாக நடந்தேறி வருகின்றமை முஸ்லிம் சிவில் சமூகத்தின் மத்தியில் பாரியதொரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எமது முஸ்லிம் தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகளும் ஒரு வகையில் காரணமாக அமைந்தமை மறுதலிக்க முடியாது.

அத்துடன், தமிழ் தலைமைகள் தமது பணியினை செவ்வனே ஆரம்பித்துள்ளமையை ஊடங்கங்கள் வாயிலாக பரவலாக அறிய முடிகின்றது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகமுண்டு.

ஆகவே, மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை வெற்றிக்கொண்டாட்டங்களில் கரைத்து விட்டு, கைசேதப்படும் நிலையைத்தவிர்த்து, முஸ்லிம் சமூகம் தமக்கு வழங்கிய ஆணையூடாக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை முஸ்லிம் புத்திஜீவிகள், மாற்றின நடுநிலையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்துக் கொண்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வெற்றி பெற்ற மற்றும் தூரதிஷ்டாவசமாக வெற்றி பெற முடியாமல் போன முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கட்சிகளும் முன் வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.