மேய்ச்சல் தரைகளை அடையாளப்படுத்துமாறு கோரிக்கை.

( துறையூர் சஞ்சயன் )

மட்டு அம்பாறை மாவட்ட வெல்லாவெளி, பட்டிப்பளை, செங்கலடி, வாகரை, வவுணதீவு, மகோயா ஆகிய செயலகப் பிரிவுக்குட்பட்ட கால்நடையாளர்கள் ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையின்மையினால் மிகுந்த அசெளகரியத்துக்குள்ளாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பரம்பரை பரம்பரையாக நினைவு தெரிந்த காலம் வரை மட்டு அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான மங்களகம, திவிலான, வழகல ஆகிய மேய்ச்சல் தரைவெளிகளில் மாடுகளை
மேய்க்கும் பண்ணையாளர்களின் மாடுகள் தொடர்ச்சியாக சுடப்படுவதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டு அம்பாறை எல்லைப்பகுதியில் மாடுகளை மேய்ப்பவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுவதுடன் அவர்களுக்கெதிராக மகியங்கனை, அம்பாறை நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பிரதேச, மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் பல தடவை எடுத்துச்சொல்லியும் இதற்கான நிரந்தரத் தீர்வு இற்றைவரை கிடைக்கப்பெறவில்லையென பண்ணையாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

படுவான்கரை செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைப்புற கிராம மக்களின் ஜீவனோபாய வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரைவெளிகளை நிர்ணய அடையாளப்படுத்தி தருமாறு கால்நடையாளர்கள் உரிய அலுவலர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.