நாம் ஒன்றுபடாதுவிட்டால் தமிழர்கள் தேசிய இனமல்ல வந்தேறு குடிகள் என நிருபித்துவிடுவார்கள்.ஜனா.

நாம் ஒன்றுபடாதுவிட்டால் தமிழர்கள் தேசிய இனமல்ல வந்தேறு குடிகள் என நிருபித்துவிடுவார்கள்  என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

கிழக்கு மக்கள் கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் இம்முறை 50ஆயிரம் வாக்குகளை கூட்டமைப்பிற்கு குறைவாக வழங்கியுள்ளனர். கிழக்கில் மொட்டு கட்சிக்கு முதன் முதலில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதிகூடிய விருப்புவாக்குகளோடு ஒரு ஆசனத்தை பெற்றிருக்கிறது.
அபிவிருத்தி, தொழில் வாய்ப்புக்களுக்காக மக்கள் அந்தப் பக்கம் சார்ந்திருக்கிறார்கள். இது நிரந்தரமானதல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு நிலையான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியில் உள்ள சக்திகளோடு போராடியதைவிட கட்சிக்குள்ளே விருப்புவாக்கிற்கான போராட்டம் உச்சமாக இருந்தது. விருப்பு வாக்கு பிரச்சினை சில இடங்களில் அடிதடிகளில் முடிந்திருக்கிறது.

ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னர் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாசா போன்றோருக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரித்திருந்தனர்.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழி ஆதி மொழி என உரையாற்றியதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பியது. ஐனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் யாருக்கு ஆதரவு அளித்தார்களோ அவர்களே அதிகளவில் எதிர்ப்புகளை வெளியிட்டனர். ராஜபக்ஷ சகோதரர்களை விட சரத் பொன்சேகா, சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியினரே அதிக இனவாத கருத்துக்களை வெளியிட்டனர்.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான துவேசத்தை தூண்டி வாக்கு வங்கியை அதிகரிப்பதே இவர்களது நோக்கம் என்பது வெளிப்படையாக தெரிந்தது.ராஜபக்ஷ சகோதரர்களின் வழிகளை எதிர்கட்சியினரும் தற்போது கையாளத் தொடங்கியுன.

தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக போராடிய நாம் ஒன்றுபட வேண்டிய தேவை உள்ளது. கிழக்கு மாகாண தொல்லியல் செயலணியில் பௌத்த பிக்குகளும், ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும் என முழுவதுமாக சிங்கள மொழி பேசுபவர்களே நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள் என கூறுவதற்கான ஆதாரங்களை தேடிவருகின்றனர்.

இந் நிலையில் நாம் ஒன்றுபடாதுவிட்டால் தமிழர்கள் தேசிய இனமல்ல வந்தேறு குடிகள் என நிருபித்துவிடுவார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை என்ன செய்தார்கள் என கேட்டவர்கள் தற்போது நாடாளுமன்றம் வந்திருக்கிறார்கள். இவர்கள் கூட்டமைப்பு செய்ததை விட மேலதிகமாக என்னத்தை செய்துவிடப் போகின்றார்கள் என்பதனை மக்கள் உணர்வார்கள், என்றார்.