கல்முனை பஸ் நிலையத்திற்கு பின்னால் கூட்டம் கூட்டமாக யானைகள் படையெடுப்பு -மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை பிரதான நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திற்கு பின்னாலுள்ள பொதுமக்களின் வயல் காணிகளுக்குள் கூட்டம் கூட்டமாக யானைகள் தற்போது படையெடுத்து வருகின்றன.  மாலை வேளைகளில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக குறித்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தையடுத்து மக்கள் பீதியடைந்தனர். இதனால் குறித்த வயல் காணிகளை அண்டிய பகுதிகளில் வீதி வழியாக மக்கள் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இரவு வேளைகளில் அதிகளவிலான யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதியை நோக்கி வந்து செல்வதால் தற்போது பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம், நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு போன்ற இடங்களில் வயல் காணிகளை அண்டிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் இந்த யானைகள் வருகையை கண்டு தற்போது அச்சமடைந்துள்ளனர். இதற்கு முன்னரும் பலதடவைகள் கிராமங்களுக்குள் நுளைந்து உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளன.
இந்த விடயம் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.