எமக்கு காணியும், சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையுமே தேவை. சந்திப்பின் போது மக்களால் தெரிவிப்பு

0
232
ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா.சாணக்கியன் தனக்கும் தமிழரசு கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் நேற்று (05) போரதீவுப்பற்றின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இம் மக்கள் சந்திப்பின் போது எல்லைப்புற கிராமங்களில் வாழும் மக்களால் தங்களுக்கு சுதந்திரமாக வாழ வேண்டிய சூழல் உருவாக வேண்டும். எமக்கான மேய்ச்சல் தரைகள் ஒதுக்கப்பட வேண்டும். அத்துடன் அங்கு நாம் சுதந்திரமாக எமது சுயதொழிலை செய்வதற்கான நிலையையும் உருவாக்க வேண்டும் எனவும்,
எமது நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடப்படுகின்றன அவற்றையும் நிறுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் “நான் எனது பிரச்சார மேடைகளிலே இதை பல தடவைகளில் கூறிவந்தேன். அதை மக்கள் கேட்கவில்லை. தற்போது புதிய அரசாங்கமானது பாரிய அசூர பலத்துடன் உள்ளது. அவர்கள் நினைத்ததை செய்வதற்காகவும் தான் 20வது அரசியற் சீர்திருத்த சட்ட மூலமொன்றை உருவாக்கியுள்ளனர். ஆகவே இனி நாம் அபிவிருத்தி என்று கோசமிட்டு மக்களின் வாக்குகளை பெற்றவர்களை தூங்கவிட கூடாது. அவர்களிடம் சென்று எமக்கு தேவையானதை கூறி அவற்றை பெற்று வரும்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், என்னால் முடிந்த செயற்படுகளை எனது காலத்தினுள் செய்து தருவேன் எனவும் கூறினார்.
வாழக்காலைஆறு, மண்டூர் 39 செல்வாபுரம், திக்கோடை, இளைஞர் விவசாய திட்டம், தும்பங்கேணி, காந்திபுரம், மற்றும் பழுகாமம் போன்ற பிரதேச மக்கள் பெரும் வரவேற்பையும் வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(பழுகாமம் நிருபர்)