சாய்ந்தமருதில் ஹரீஸுக்கு வரவேற்பு விழா

0
96

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு, மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸை வரவேற்கும் பெருவிழா செவ்வாய்க்கிழமை (01) மாலை சாய்ந்தமருதில் நடைபெற்றது.

கல்முனை மாநகர முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது இல்ல வளாகத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல் அப்துல் மஜிட் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.நிசார், ஏ.எம்.பைறோஸ், எம்.எஸ்.எம்.ஹரீஸ் நவாஸ், காரைதீவு பிரதேச சபையின் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பான சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம் பஸ்மீர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.நிசார்தீன், ஏ.எச்.எச்.எம்.நபார் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் வர்த்தகர்களும் இளைஞர்களும் மீராசாஹிப் மகளிர் அணியை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான பெண்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், முஸ்லிம்களின் பாரம்பரிய பொல்லடி கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அழைத்து வரப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது தன்னைத் தோற்கடிப்பதற்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்சிக்குள்ளும் வெளியேயும் பாரிய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றியீட்டிய 04 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் அதிகூடிய விருப்பு வாக்குகளினால் முதன்மை உறுப்பினராக தான் தெரிவு செய்யப்படுவதற்கு இப்பிரதேசத்தில் இருந்து பல சவால்களுக்கு மத்தியில் பாரிய பங்களிப்பு வழங்கிய சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் விசேட நன்றியைத் தெரிவிப்பதாகவும் தனது வாழ்நாளில் இந்த பங்களிப்பினை ஒருபோதும் மறக்க மாட்டேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இதன்போது குறிப்பிட்டார்.