மலையக உதவி ஆசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – மத்திய மாகாண ஆளுநர்.

தலவாக்கலை நிருபர்.

மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்; மத்திய மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் உறுதி. ஆசிரியர் பயிற்சிகளை நிறைவுசெய்த மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளிடம், மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், மத்திய மாகாண ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று கண்டியிலுள்ள ஆளுநரின் வதிவிடத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது மலையக ஆசிரியர் உதவியாளர்கள் விவகாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சிகளை நிறைவுசெய்துள்ள போதிலும் மத்திய மாகாணத்திலுள்ள சுமார் 420 ஆசிரியர் உதவியாளர்கள் இன்னும் உரிய வகையில் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய இ.தொ.கா. பிரதிநிதிகள், அவர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.  பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. பிரதிநிதிகளின் கோரிக்கையைஏற்ற ஆளுநர், விரைவில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார். பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளரும், ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், மத்திய மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் துரை மதியுகராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கணபதி கணகராஜ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.