இறக்காமம் வைத்தியசாலை ஒரு வருடத்துள் பாரிய மாற்றத்தைக்காணும்.

கல்முனை பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன்.
(காரைதீவு நிருபர் சகா)

பின்தங்கிய பிரதேசத்திலுள்ள இறக்காமம்  வைத்தியசாலை இன்னும் ஒரு வருடத்துள் பாரிய மாற்றத்தைக்காணும். அதுவரை பொறுத்திருங்கள்.


இவ்வாறு இறக்காமம் வாப்பத்தான்சேனை லீடர் யூனியன் பாடசாலையில்  பற்சிகிச்சைநிலையத்தை திறந்துவைத்துரையாற்றிய கல்முனை பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.


இத்திறப்புவிழா பாடசாலை அதிபர் யூ.எம்.நிஹால் தலைமையில் நேற்று நடைபெற்றது.திறப்புவிழாவில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமும் கௌரவஅதிதியாகக்கலந்து கொண்டார்.
முன்னதாக அதிதிகள் பற்சிகிச்சை நிலையத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித்திறந்துவைத்தனர்.


அங்கு பணிப்பாளர்.டாக்டர் சுகுணன் மேலும் பேசுகையில்:

இறக்காமக்கோட்டத்திலுள்ள 12பாடசாலைகளின் மாணவர்களும் இந்த பற்சிகிச்சை நிலையத்தில் பயன்பெறவேண்டும்.காலக்கிரமத்தில் இதற்குத்தேவையான ஏனைய சகல உபகரணங்களும் வழங்கிவைக்கப்படும்.
இப்பாடசாலையின் நாமத்திற்கு மகுடம் சூட்டுமாப்போல் ‘லீடர்’ என்ற சொல்லுக்கு இங்குள்ள அதிபர் நி ஹால் இலக்கணமாகச்செயற்பட்டார். அதாவது மிகவும் நேர்த்தியாக இவ்விழாவை கச்சிதமாக ஒழுங்கமைத்து செயற்பட்டார். வாழ்த்துக்கள்.


மேலும் பல்லின் முக்கியத்துவம் கருதி நகர்ப்புற பிரதேசங்களில் இவ்வாறான நிலையங்கள் இயங்கி வருகின்றன. எனவே  கிராமப் புறத்தில் இவ்வாறான பற்சிகிச்சை நிலையங்களைத் திறப்பதில் ஆர்வமாக உள்ளேன்.

மேலும் பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி பற்றி அதிபர் கேட்டுக் கொண்டார்.இப்பிரதேச வைத்திய சாலையை அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கி உள்ளேன்.உள்ளூர் அரசியல் வாதிகளின் தலையீடு இன்றி.ஒரு வருடத்திற்குள் மாற்றத்தைக் காணுவீர்கள் .


இப்பிரதேசத்தில் பற்சிகிச்சை நிலையம் அமைவதற்கு சாதகமான அறிக்கையினை சிபாரிசு செய்து வழங்கிய பிராந்திய பல் வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஜ.எம்..ஹபீல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
ஏனைய பாடசாலை மாணவர்கள் இப்பிரயோசனத்தைப் பெற பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உதவி புரிய வேண்டும்.; என்றார்.

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பேசுகையில்:
கல்வி மற்றும் சுகாதார திணைக்ளங்கள் இணைந்து இன்று திறந்துவைக்கின்ற இப்பற்சிகிச்சை நிலையத்திற்கு தனது அதிபர் அலுவலகத்தையே சுயநலம் கருதாது உவந்தளித்த அதிபர்  நிஹாலைப் பாராட்டாமலிருக்கமுடியாது. என்றார்.
அதிதிகளுக்கு பொன்னாடைபோர்த்தி பாராட்டிக்கௌரவித்தது பாடசாலைச்சமுகம்.